Published : 29 May 2020 01:10 PM
Last Updated : 29 May 2020 01:10 PM

ஒன்றிணைவோம் வா’; 2-ம் கட்டமாக 6.23 லட்சம் மனுக்களை முதல்வரின் அலுவலகத்தில் அளித்தது திமுக

ஒன்றிணைவோம் வா’ ஹெல்ப்லைன் மூலம் பெறப்பட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான மனுக்களை திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் அலுவலகத்தில் (CMO-க்கு) சமர்ப்பித்தார்.

லட்சக்கணக்கான அழைப்புகள் தொடர்ந்து பொதுமக்களுக்கான உதவி எண்ணிற்கு வருவதால், இன்று மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான உதவி எண் மூலம் பெறப்பட்ட 6,23,914 கோரிக்கை மனுக்களை இரண்டாவது முறையாக முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் திமுக கட்சியால் பெறப்பட்ட இந்த பெரிய அளவிலான கோரிக்கைகள், தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருப்பதின் சான்றாகும்" என்று இந்த மனுக்களை சமர்ப்பிக்கும் போது ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்களை மின் அஞ்சல் செய்வதைத் தவிர, சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் அனைத்து விவரங்களும் www.ondrinaivomvaa.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

திமுக மாவட்ட செயலாளர்கள் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடமும் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிப்பார்கள். மேலும் பிரச்சனைகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை நிலையைப் பற்றி தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

'ஒன்றிணைவோம் வா’ எனும் முன்னெடுப்பில், பொதுமக்களுக்கான உதவி எண், ஸ்டாலின் அலுவலகத்துடன் அனைவரும் தொடர்பு கொள்ளும் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டாலினின் அலுவலகத்திற்கு இன்றுவரை மொத்தம் 18 லட்சத்திற்கு மேலான துயர அழைப்புகள் வந்துள்ளன.

திமுக கட்சி உறுப்பினர்கள், குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி இந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், திமுக கட்சி இந்த கடினமான நேரத்தில் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் குரலாக விளங்கி அவர்களின் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுப்பி வருகிறது.

தேவைப்படும் குடிமக்களுக்கு திறம்பட உதவுவதற்கு கிடைக்கக்கூடிய வளங்களையும், அரசு அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னால், அவசர நடவடிக்கைக்காக மக்கள் உதவி எண்ணில் பெறப்பட்ட 1 லட்சம் கோரிக்கைகளின் தொகுப்பையும் திமுக தலைமைச் செயலரிடம் அளித்துள்ளது”.

இவ்வாறு திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:

“முதற்கட்டமாக 1லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6லட்ச கோரிக்கை மனுக்களை @CMOTamilNadu உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். http://ondrinaivomvaa.inவில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x