Published : 28 May 2020 10:24 PM
Last Updated : 28 May 2020 10:24 PM
சோதனைச் சாவடிகளில் உள்ளூர் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் அதிக கட்டுபாடுகளை விதிப்பதால் சொந்த வாகனங்களில் வருவோர் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கரோனா தடுப்புக்கான ஊரடங்கு மார்ச் 24-ம் தேதி தொடங்கி மே-31 வரை 4 முறை நீடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அத்தியவாசியப் பொருட்களுக்கான வாகனங்கள் தவிர, எஞ்சிய வாகனத்துக்கு அனுமதி இல்லை.
இந்த ஊரடங்கால் மதுரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தினக்கூலி என, ஏராளமானோர் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். அரசு, காவல்துறையினர், அரசியல் கட்சியினர் தனியார் அமைப்பினர் வழங்கிய உணவுப் பொருட்களை கொண்டு வாழ்க்கையை நகர்த்தினர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதிக்கு பின், ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. மதுரையில் நகர், புறநகர்ப் பகுதியில் சில இடங்களில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. புலம் பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் பாலம், கட்டிடம் உள்ளிட்ட பிற கட்டுமானப் பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களே பணி செய்கின்றனர்.
பொதுப் போக்குவரத்து இன்றி, மாவட்ட எல்லையொட்டிய பகுதி, அருகிலுள்ள பிற மாவட்ட தொழிலாளர்கள் என, நூற்றுக்கணக்கானோர் கட்டுமானம், தொழிற்சாலை உள்ளிட்ட பணிகளுக்கென பைக்,ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணிக்கின்றனர். மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் இவர்களுக்கு கெடுபிடிகள் அதிகரிக்கின்றன.
தினக்கூலிக்கு செல்லும் அவர்களிடம் போலீஸார் இ- பாஸ் கேட்பது என, தேவையற்ற காரணத்தை கூறி காக்க வைப்பதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் போக முடியாமல் வேலை இழப்பும் ஏற்படுகிறது என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து கட்டுமானத் தொழிலாளர் சங்க (சிஐடியூ) மதுரை மாவட்ட செயலர் சுப்பையா கூறியது:
மதுரை மாவட்டத்தில் 24 லட்சம் மக்கள் தொகையில் 3 லட்சம் பேர் கட்டிடத் தொழிலாளர்கள். திருமங்கலம், வாடிப்பட்டி, பாலமேடு, வலையங்குளம், பெருங்குடி உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து 1.30 பேர் தினமும் நகருக்குள் வருகின்றனர்.
திருப்புவனம், பூவந்தி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை போன்ற பிற மாவட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு வருகின்றனர். தற்போது, சோதனைச் சாவடிகளில் உள்ளூர் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் அதிக கட்டுபாடுகளை விதிப்பதால் சொந்த வாகனங்களில் வருவோர் பாதிக்கின்றனர்.
தூசியும், மண்ணும் நிறைந்த அவர்கள் யார் என, தெரிந்தும், அவர்களிடம் இ- பாஸ் கேட்டு காக்க வைப்பதால் வேலையிழந்து பாதிக்கின்றனர். கட்டுமான தொழிலாளர்களுக்கு போலீஸ் தளர்வு அளிக்கலாம். தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி சமூக இடைவெளி போன்ற கட்டுபாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கவேண்டும், என்றார்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கட்டுமானத் தொழிலாளர்கள், அத்தியவாசியப் பணிக்கு செல்வோரிடம் கடுமை காட்டுவதில்லை. பிற மாவட்டத்தினராக இருந்தால் இ- பாஸ் விவரம் கேட்கப்படுகிறது. யாரையும் காக்க வைப்பதில்லை. அப்படி இருந்தால் போலீஸாருக்கு அறிவுறுத்தப்படும்,’’ என்றார்.
பாண்டியராஜபுரத்தில் கெடுபிடி அதிகரிப்பு?
இதற்கிடையில் மதுரை பாண்டியராஜபுரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீஸாரைவிட, அவர்களுக்கு உதவிக்கு இருக்கும் ஊர்க்காவல் படை வீரர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கட்டிடத்தொழில், மருத்துவம் உள்ளிட்ட அத்தியவாசிய பணிக்கு செல்வோரிடம் கடுமை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இ- பாஸ் உள்ளது என, கூறினாலும், வாகனங்களில் இருந்து இறங்கி வரவேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கிறார்களாம். இவையெல்லாம், போலீஸாருக்கு தெரிந்தே நடக்கிறதா எனத் தெரியவில்லை.
இது போன்ற நெருக்கடிகளை ஓரிரு சோதனைச் சாவடிகளில் சமாளிக்க வேண்டியுள்ளது என பாதிக்கப்பட்டோர் குற்றம் சுமத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT