Published : 28 May 2020 08:18 PM
Last Updated : 28 May 2020 08:18 PM
காவிரி டெல்டா பாசனப் பகுதிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், புதிய தண்ணீரை வரவேற்கும் விதமாக, கல்லணை புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் வழியாகப் பகிர்ந்து திறந்து விடப்படும்.
ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், ஜூன் 16-ம் தேதி இரவில் கல்லணையை வந்தடையும் நிலையில், 17-ம் தேதி பாசனத்துகாக, தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கல்லணையில் உள்ள காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் சீரமைக்கப்பட்டு முறையாகச் செயல்படுகிறது என சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன. மேலும், புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, கல்லணையைப் புதுப்பொலிவாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றுப் பாலங்கள், கரிகால்சோழன், காவிரியம்மன், ராஜராஜ சோழன், அகத்தியர், விவசாயி சிலைகளும், கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், கருப்பண்ணசாமி கோயில், பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோயில், ஆர்தர் காட்டன் சிலை ஆகியவற்றுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT