Last Updated : 28 May, 2020 07:40 PM

 

Published : 28 May 2020 07:40 PM
Last Updated : 28 May 2020 07:40 PM

ஏழைகள் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்ட வேண்டும்; புலம்பெயர் தொழிலாளர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: நாராயணசாமி

நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று (மே 28) கூறியதாவது:

"கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்தவர்களின் வங்கிக் கணக்கில் நடப்பு மாதத்தில் ரூ.10 ஆயிரம் செலுத்தவும், அடுத்த 5 மாதங்களுக்கு தலா ரூ.7,500 செலுத்தவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி நுகர்வு செய்யும்போது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில், இங்கு பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும்.

தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் நலன் கருதி காங்கிரஸ் கட்சியின் இக்கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும். ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் செய்ய வேண்டும். ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

அத்தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் கிடைக்கவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை வழங்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இதுவும் காங்கிரஸ் கட்சியின் முக்கியக் கோரிக்கை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறுதொழில் நிறுவனங்கள் விஷயத்தில் பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்ட வேண்டும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x