Published : 28 May 2020 07:34 PM
Last Updated : 28 May 2020 07:34 PM
தடுப்பூசி, மருந்து இல்லாமல் சித்தா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை அளித்து மரண விகிதத்தை .7 சதவீதமாகக் குறைத்து வருகிறோம். இதைப் பாராட்ட வேண்டாமா? பாராட்டக்கூட வேண்டாம். விமர்சிக்காமல் இருக்கலாம். நோய்த்தொற்று எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
“கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். அதற்கு மிகச் சவாலாக இருப்பது பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள். தற்போது பார்த்தீர்கள் என்றால் மகாராஷ்ராவிலிருந்து வந்தவர்களில் மட்டும் இன்று 117 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களில் இதுவரை மொத்தம் 936 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் மூலம் 1,253 பேருக்குத் தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவிலிருந்து வரும் அனைவருக்குமே கிட்டத்தட்ட பாசிட்டிவ் வருகிறது. அவ்வாறு வருபவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவது, சிகிச்சை, சோதனை என பல சவாலான பணிகள் உள்ளன. இன்று எடுக்கப்பட்ட மொத்த ஆய்வு எண்ணிக்கை 12,246. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கை 4,55,216 பேர்.
இது இந்தியாவிலேயே அதிகபட்சம். அதிக சோதனை நடத்துவதால் அதிக தொற்று எண்ணிக்கை வெளிவருகிறது. அதனால் அதுகுறித்துப் பொதுவெளியில் அறிவிக்கிறோம். ஆதங்கத்தோடு தெரிவிக்கிறேன். தயவுசெய்து எண்ணிக்கையை வைத்துப் பயப்பட வேண்டாம். அச்சப்பட வேண்டாம். எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம்.
எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்யும் களமல்ல இது. இது ஒரு நோய்த்தொற்று. தமிழகத்தில் மட்டுமா இருக்கிறது. இது உலகத்தொற்று. பெல்ஜியத்தில் மரண விகிதம் 16. பிரான்ஸில் 15, இத்தாலியில் 16 , இங்கிலாந்தில் 14 என மரண விகிதம் உள்ளது. 1 லட்சம் பேர் இறந்த அமெரிக்காவில் மரண விகிதம் 6%.
16, 15, 14 மரண விகிதம் உலகின் பெரிய நாடுகளில் உள்ள நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் மரண விகிதம் என்ன? உலகம் முழுவதும் இப்படி இருக்கும் நிலையில் தடுப்பூசி, மருந்து இல்லாமல் எப்படிச் சரி செய்கிறோம்? சித்தா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை அளித்து மரண விகிதத்தை .7 சதவீதமாகக் குறைத்து வருகிறோம். இதைப் பாராட்ட வேண்டாமா? பாராட்டக்கூட வேண்டாம். விமர்சிக்காமல் இருக்கலாம் அல்லவா?
நாம் என்ன சொல்கிறோம். மாஸ்க் அணியச் சொல்கிறோம். முதல்வர் சொல்கிறார். அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், அதைப் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதே இல்லை. கடைகளில் வேலை செய்பவர்கள் மாஸ்க் அணியாமல் வியாபாரம் செய்கிறார்கள். அதிகாரிகளைப் பார்த்தவுடன் முகக்கவசம் அணிகிறார்கள். இது என்ன நடைமுறை. மாஸ்க் ஏன் போடவில்லை என்று கேட்டால் மூச்சு திணறுகிறது என்கிறார்கள்.
போய் மருத்துவமனையில் பாருங்கள். நோய் வந்தவர்கள் உயிருக்குப் போராடக் காற்றுக்காக அவர்கள் செல்கள் அழியும் நிலையில் எதிர்த்துப் போராடும் நிலையை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.
நான் ஆதங்கத்துடன் சொல்கிறேன். இன்றுள்ள கொடுமையான நோய்த்தொற்று உள்ள மருத்துவமனையில் இப்போது ஏ.சி. கிடையாது. அங்கு மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் முழு உடல் கவசம், மாஸ்க், கையுறை, ஷூ போட்டுக்கொண்டு காற்று புகாத அந்த உடைகளுக்குள் அவர்கள் வேதனைப்படுவது சாதாரண விஷயமா?
வாஷ்ரூம் போக முடியாது. அங்கு ஏ.சி.யும் கிடையாது. ஒரு நோயாளிக்கு 16 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்கிறோம். இப்படிக் கொடுத்துக் கொடுத்துப் போராடி உயிர்களைக் காக்கிறோம்.
உலக நாடுகள் எண்ணிக்கையை மீறி தமிழகத்தில் மரண விகிதத்தைக் குறைக்கப் போராடும் மருத்துவர்களை, அரசின் செயலைக் கொச்சைப்படுத்தக்கூடாது. இன்று நோயைக் குறைக்க அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மூன்று மாதத்தில் 70 ஆய்வுக்கூடங்கள் அமைத்து டெஸ்ட் எடுத்து உரிய சிகிச்சை அளிக்கிறோம்.
மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, காவலர்கள் என அனைவரும் எதிர்த்துக் களத்தில் பணியாற்றுகிறார்கள். பாதுகாப்புக் கவச உடை அணிந்து. பிளாஸ்மா ட்ரையல் கொடுக்கப்பட்டு 7 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். அதேபோல் ஐசிஎம்ஆர் கொடுத்த புதிய மருந்து அதைக் கொடுத்து நோயாளி குணமாகியிருக்கிறார். இது மிக நல்ல செய்தி. இதுபோன்று நாம் சிகிச்சைக்கான முறைகளை அமல்படுத்துவதால் மரண விகிதம் மிகவும் குறைவாக .7 சதவீதமாக உள்ளது.
அவ்வளவு போராடியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் கடைசி நேரத்தில் கொண்டு வருகிறார்கள். இதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு வழிமுறை கொடுத்துள்ளோம். இவ்வளவுக்குப் பின்னும் நான் பொதுமக்களிடம் வேண்டுவது நோய்க்கு மருந்து கிடையாது. கட்டுப்பாடுதானே நம்மைக் காக்கும். நான் கட்டுப்பாடாக இருப்பேன். அரசு சொல்வதைக் கேட்பேன் என இருப்பதுதானே நம்மைக் காக்கும்.
சென்னையில் சிறப்பு நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. யார் வேண்டுமானாலும் சாதாரண இருமல், சாதாரண காய்ச்சல், சாதாரண மூச்சுத்திணறல் இருந்தாலே வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என அழைக்கிறேன். 24 மணி நேரத்தில் உங்களுக்கான பரிசோதனை முடிவைச் சொல்லி விடுகிறோம்.
அதை ஆன்லைனில் சொல்லிவிடுகிறோம். யாருக்கு வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. விமர்சிக்கலாம், ஆனால் உழைப்பை, அர்ப்பணிப்பை, தியாகத்தைச் செய்யும் நல்லவற்றைச் சொல்லமாட்டேன். விமர்சிக்க மட்டும் செய்வேன் என்றால் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
ஆகவே மூன்று மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், பணியாளர்களை அவர்கள் பணியைக் கொச்சைப்படுத்த வேண்டாம். ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொல்லுங்கள். கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT