Published : 28 May 2020 02:37 PM
Last Updated : 28 May 2020 02:37 PM

நளினி - முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முருகன் - நளினி: கோப்புப்படம்

சென்னை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், முருகன் லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்த அவர், ஏற்கெனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (மே 28) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால் இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x