Published : 28 May 2020 02:09 PM
Last Updated : 28 May 2020 02:09 PM

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி; விவசாயிகளின் கண்காணிப்புக்குழுவை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தூர்வாரும் பணிகள் முழுமையாகவும் தீர்மானித்த திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் விவசாயிகளின் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கக் கோரியும் ஜூன் 1-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்ட அறிக்கை:

''காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவது என அனைத்துமே காலதாமதமாக தொடங்கப்பட்டது. ஜனவரி 28-ம் தேதியே மேட்டூர் அணை மூடப்படும் நிலையில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தம் மே 20-ம் தேதிதான் விடப்பட்டது. ஜூன் 12-ம் தேதி அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் தூர்வாரும் பணி என்பது பெயரளவுக்கே நடைபெறும் என்பது வெள்ளிடை மலை.

தூர்வாரும் பணிக்கான ஒப்பந்ததாரர்களாக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பணிகளையும் எடுத்துள்ளனர். பணிகளைக் கண்காணிப்பதற்கு மாவட்டத்திற்கொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருந்தாலும் அதிகாரிகளால் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் செல்வாக்குமிக்க நபர்களை மீறி அவர்களால் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ள முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஒதுக்கப்பட்ட வேலையின் அளவு, நிதி ஒதுக்கீடு, பணி முடிக்க வேண்டிய காலம், ஒப்பந்ததாரரின் பெயர் போன்ற விவரங்கள் பணியிடத்தில் விளம்பரப் பலகையின் மூலம் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படிப்பட்ட எந்த விவரமும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படாமல் வெளிப்படைத் தன்மையின்றி மூடி மறைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

இதனால்தான் தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க கோட்ட அளவில் விவசாயிகள் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு, மோசடி முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக இத்தகைய குழுக்களை அமைக்க மறுத்து வருவது கண்டனத்திற்குரியது.

தூர்வாரும் பணிகள் முழுமையாகவும் தீர்மானித்த திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் விவசாயிகளின் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கக் கோரியும் ஜூன் 1-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்''.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x