Published : 28 May 2020 02:01 PM
Last Updated : 28 May 2020 02:01 PM

மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பெண்: கரோனா தொற்றுக்குத் தப்பிய நாடுகாணி கிராமம்

பெண் தனிமைப்படுத்திக் கொண்ட வீடு.

“தனக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் குடும்பத்தாருடன்கூட ஒட்டாமல், உறவாடாமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் அந்த நர்ஸிங் படித்த பெண். முதல் தொற்றானாலும் அவரின் செயல்பாடுதான் ஊரையே பாதுகாத்திருக்கிறது!” என்று பேசும் மக்கள் நிறைந்த கிராமமாக மாறியிருக்கிறது நாடுகாணி.

நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் நாடுகாணி கிராமம் உள்ளது. இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் பொன்வயல் உள்ளது. இந்தக் கிராமமே வனத்துக்கு நடுவேதான் உள்ளது. இதன் பின்புறம் 14 கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் நடந்தால் வழிக்கடவு என்ற கேரள கிராமத்தை அடையலாம். இந்த பொன்வயல் கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தன் கணவர் மற்றும் 2 மகன்களுடன் 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து காரில் இங்கு வந்திருக்கிறார். நர்ஸிங் முடித்த அவர், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

தற்போது சென்னையில் நிலவும் கரோனா அச்சத்தால் குடும்பத்துடன் காரிலேயே ஊர் திரும்பியுள்ளார். இவர்களுக்குப் பொன்வயலில் சொந்தமான வீடு இருந்தாலும் அதில் தங்காமல் அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு குன்றின் மீது காலியாக உள்ள வீட்டில் தங்கியிருக்கின்றனர். பொன்வயலைச் சுற்றிலும் 28 வீடுகள் இருந்தும்கூட அங்கே எங்கும் இவர்கள் செல்லாமல் இருந்துள்ளனர்.

தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட தனிமனித இடைவெளி விட்டு ஊருக்குள் இருந்த சிலர் வாயிலாகவே பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இவர்களில் அந்த நர்ஸிங் பெண்ணுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் வரவே, தன்னைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து, இவருடன் தங்கியிருந்த மற்ற மூவருக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர்களை அழைத்து வந்த பந்தலூரைச் சேர்ந்த கார் டிரைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப் பட்டிருப்பினும், அவர்கள் அங்கேயே அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கார் டிரைவரும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

இதையடுத்து பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகளில் வசிப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளிவராதவாறு ஒட்டுமொத்த கிராமமும் போலீஸாரால் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி அடித்துக் கிராமத்தையும், தனிமைப்படுத்தப்பட்ட வீட்டையும் சுத்தப்படுத்தினர்.

நேற்று நீலகிரி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் பாலுசாமி தலைமையில் பொன்வயலில் ஆய்வு நடத்தப்பட்டது. குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகள் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளாகும்.

இப்போது சென்னையிலிருந்து திரும்பியவர்களால் முதல் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. என்றாலும்கூட அந்த நர்ஸின் சமயோசிதப் புத்தியால்தான் தாங்கள் எல்லாம் இதிலிருந்து தப்பியதாகவும், இல்லாவிட்டால் இங்கும் பல பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்க நேரிட்டிருக்கும் என்றும் பெருமூச்செறிகிறார்கள் பொன்வயல் மக்கள்.

இதுபற்றி இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கூறும்போது, ‘‘அந்தப் பெண் நர்ஸிங் படித்தவர். அதன் பிறகு மருத்துவம் சம்பந்தப்பட்ட லேப் பரிசோதனைகள் குறித்த படிப்பும் படித்துள்ளார். அது சம்பந்தமான பணியிலேயே சென்னையில் ஓர் ஐடி கம்பெனியில் பணியில் இருக்கிறார். அவருக்கு அங்கிருந்து வரும்போதோ, இங்கே வந்த பின்போகூட தன்னை கரோனா தொற்று பாதித்திருக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் தன் சொந்த வீட்டில் தங்காமல் ஊருக்குச் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த தனி வீட்டில் தங்கியிருக்கிறார். தனது கணவர், குழந்தைகளைக்கூட அங்கேயே வெவ்வேறு அறைகளில் தங்க வைத்திருக்கிறார்.

ஒருவேளை, அவர் சென்னையிலிருந்து வந்தவுடன் நேராகத் தன் வீட்டில் தங்கி, சுற்றுப்புற ஆட்களுடன் பழகி இருந்தால் இந்த 28 வீடுகளில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்த வேண்டி வந்திருக்கும். அது மட்டுமல்ல, இங்கிருந்து நாடுகாணி, கூடலூர், பந்தலூர் என அவர்கள் சென்று வந்திருந்தால் அங்கே வரை சோதனையை விஸ்தரிக்க வேண்டி வந்திருக்கும். அந்த வகையில் அவர் தம் சொந்தப் புத்தியால் கிராம மக்களைக் காப்பாற்றியிருக்கிறார்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x