Published : 28 May 2020 01:18 PM
Last Updated : 28 May 2020 01:18 PM
கரோனா பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் படிப்படியாகப் பல்வேறு தொழில்களும், நிறுவனங்களும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தத் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி. கோவை நகரை வலம் வந்ததில் பார்வையில் பட்ட பல காட்சிகள், அந்த நிபந்தனைகளை மக்கள் மதிக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
கோவை ஒப்பணக்கார வீதி, நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் தலைக் கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளைத் துரத்தித் துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர் போலீஸார். முகக்கவசத்தை வாய்க்கும் மூக்குக்கும் பொருத்தாத ஆட்கள், அதைப் பைக்குள் வைத்துக்கொண்டு வாகனத்தில் பயணிக்கும் போலீஸாருக்குப் பயந்து அவசர அவசரமாக எடுத்துப் பொருத்திக் கொள்வதையும் காண முடிந்தது.
இருசக்கர வாகனத்தில் ஒருவர்தான் போக வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. ஆனால், கோவையில் இரண்டு பேர் சர்வசாதாரணமாகச் சென்று வருகிறார்கள். அதேபோல் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து ஒரு நபர் மட்டும் பயணிக்கலாம். ஆனால், பெரும்பான்மையான ஆட்டோக்கள் மூன்று பேர், நான்கு பேரைக்கூட சுமந்து செல்கின்றன. ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக ஆட்டோவில் சென்றால் செலவு அதிகம்’ என்று பயணிகள் தரப்பும், ‘ஒரே ஒரு பயணியை மட்டும் ஏற்றிச்சென்றால் எப்படி கட்டுப்படியாகும்?’ என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பும் சொல்வதைக் கேட்க முடிகிறது.
ஒப்பணக்கார வீதியில் பெரிய கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், மால்கள், தியேட்டர்கள், மண்டபங்கள் பூட்டியே இருக்கின்றன. நடுத்தரமான ஜவுளிக் கடைகள், ரெடிமேட் துணிக் கடைகள், எண்ணெய், மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் பெரும்பான்மையோர் முகக்கவசத்தை அறவே மறந்துவிட்டனர் என்பது முக்கியமான விஷயம்.
தள்ளுவண்டிக் கடைகள் முன் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளுடன் சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று சுங்கம் பைபாஸ், ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, பீளமேடு, ஹோப்ஸ், டவுன் ஹால், உக்கடம் என பல்வேறு பகுதிகளிலும் பழக்கடை, ஜூஸ், வடை, பலகாரக் கடை என சாலையோரக் கடைகள் திறந்திருந்தன. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்படுவது கண்கூடாகத் தெரிந்தது.
பெரும்பாலான சலூன் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. ‘கடை முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஒருவருக்குப் போர்த்திய துணியை இன்னொருவருக்குப் பயன்படுத்தக் கூடாது. துணிகளை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டுவந்துவிடுவது நலம்’ என்றெல்லாம் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘கடைகளில் கிருமி நாசினி தெளித்துவிடுகிறோம். ஆனால், வாடிக்கையாளர்களே ஆளுக்கொரு துணி கொண்டுவருவதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை’ என்கிறார்கள் சலூன் கடைக்காரர்கள்.
டீக்கடைகள், டிபன், பேக்கரி கடைகளில் பார்சல் மட்டும்தான் அனுமதி என்று சொன்னாலும் அதை யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. கடைகளுக்கு அருகே அல்லது அருகில் உள்ள சந்துகளில் நின்றபடி காகிதக் கோப்பைகளில் தேநீர் அருந்தும் வாடிக்கையாளர்களைப் பார்க்க முடிந்தது.
பொது முடக்கத் தளர்வுகள், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவே அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அரசு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றிக் கவனமாக நடந்துகொண்டால்தான் கரோனா அபாயத்திலிருந்து தப்ப முடியும். மக்கள் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT