Published : 28 May 2020 01:08 PM
Last Updated : 28 May 2020 01:08 PM

வறண்ட வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்: சித்திரைத் திருவிழாவுக்காக இருப்பு வைத்த தண்ணீர் குடிநீருக்காக திறப்பு- மலர் தூவி வரவேற்ற மதுரை மக்கள்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

வைகை அணையில் சித்திரைத் திருவிழாவுக்காக இருப்பு வைத்திருந்த தண்ணீர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீருக்காக திறக்கப்பட்டது.

அதனால், கடந்த 6 மாதமாக தண்ணீர் வராமல் வறண்டு கிடந்த வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது.

இந்த தண்ணீர் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. கடந்த 25 ஆண்டிற்கு முன் வரை வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீரோட்டம் காணப்படும். மக்கள் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். விவசாயமும் செழிப்பாக நடந்தது.

ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் தென்மேற்கு பருவமழை குறையத்தொடங்கியதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்தது. அதனால், அங்கிருந்து வைகை அணைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரும் குறைந்தது. வைகை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை போதுமான அளவு இல்லை. அதனால், விவசாயத்திற்காக கட்டிய வைகை அணை, தற்போது முழுக்க முழுக்க குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுகிறது.

அபூர்வமாக பருவமழைகள் செழிப்பாக செய்தால் பெரியாறு கால்வாய்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டாக விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது அபூர்வமாகிவிட்டதால் விவசாய விளைநிலங்கள் வானம்பார்த்த பூமியாகிவிட்டன. சில சமயங்களில் சித்திரைத்திருவிழாவுக்கு கூட தண்ணீர் திறக்காமல் லாரி தண்ணீரை கொண்டு நிரப்பிய தண்ணீர் தொட்டியில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் நடக்கும்.

கடந்த சில ஆண்டாக குடிநீருக்காக ஆற்றில் தண்ணீர் திறப்படுவதும் அபூர்வமாகி, மதுரை மாநகராட்சி, ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தேனி அல்லிநகரம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வைகை அணையில் இருந்து 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனால், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீருக்காக திண்டாடும் பரிதாபம் தொடர்கிறது.

தற்போது கோடை காலம் என்பதால் வைகை ஆற்றங்கரையோர நிலத்தடி நீர் மட்டம் வறண்டுவிட்டது. ஆற்றுப்படுக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் போட்டிருந்த குடிநீர் திட்டங்கள் வறட்சிக்கு இலக்காகி கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதனால், கடந்த 25ம் தேதி சித்திரைத்திருவிழாவுக்காக வைகை அணையில் இருப்பு வைத்திருந்த 216 மில்லியன் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் திறந்துவிட்டது. 25ம் தேதி முதல் நாள் 1,500 கன அடியும், 26-ம் தேதி 850 கன அடியும், 27-ம் தேதி 350 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலையுடன் நீர் திறப்பு வைகை அணையில் நிறுத்தப்பட்டது. தற்போது மதுரை மாநகராட்சி, ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தேனி அல்லிநகரம் குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் வைகை ஆற்றில் 2-5ம் தேதி திறந்துவிட்ட தண்ணீர் இன்று காலைதான் மதுரை நகரை வந்தடைந்தது. அதற்குள் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் ஆற்றில் தண்ணீரின் வேகம் குறைந்துவிட்டது. ஆனால், வறண்டு கிடந்த வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு வந்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள், வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் மலர் தூவி வரவேற்றனர். இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வரை செல்லும் வாய்ப்புள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வழக்கமாக வைகை அணையில் தண்ணீர் திறந்தால் மதுரைக்கு மறு நாளே வந்துவிடும். ஆனால்,

நீண்ட நாளாக ஆறு வறண்டு கிடந்ததால் திறந்து விட்ட தண்ணீர் ஆவியானதோடு, வறண்டு கிடந்த நீர்வழித்தடங்களில் பெரும்பாலான தண்ணீர் பூமிக்குள் சென்றதால் குறைவான தண்ணீரே வந்தது. அதனால், மதுரை வருவதற்கு 3 நாட்களாகிவிட்டது.

தற்போது ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டதால் 25ம் தேதி 41.88 அடியாக இருந்த வைகை அணை நீர் மட்டம் நேற்று காலை 38.91 அடியாக வீழ்ச்சியடைந்தது. நீர் வரத்து சுத்தமாக இல்லை. தற்போதுள்ள தண்ணீர் ஆகஸ்ட் மாதம் வரை குடிநீருக்கு போதுமானது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x