Published : 28 May 2020 01:36 PM
Last Updated : 28 May 2020 01:36 PM
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குரு குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் கடந்த 26-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வழக்கில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குரு. இவரின் மகன் கனலரசன் (24). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான பிச்சைப்பிள்ளை குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், குரு மகன் கனலரசன், அவரது சகோதரியின் கணவர் மனோஜ் (குருவின் மருமகன்), அவரது சகோதரர் மதன் ஆகியோருக்கும், எதிர்த்தரப்பை சேர்ந்த பிச்சைப்பிள்ளை சகோதரர் காமராஜ், அவரது மகன் சதீஷ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த மதன் கனலரசன், மனோஜ் ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காமராஜ், சதீஷ் ஆகியோர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொண்ட மீன்சுருட்டி போலீஸார், கனலரசனின் நண்பர் அருண்குமார், குரு வீட்டில் வேலை செய்யும் சதீஷ்குமார், எதிர்த்தரப்பைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் நேற்று (மே 27) இரவு ஆஜர்படுத்தி அரியலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த குருவின் தாயார் கல்யாணி, குருவின் சகோதரி செந்தாமரை ஆகியோர், "எங்கள் குடும்பத்தைச் சிதைக்க பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்" எனக் குற்றம் சாட்டியுள்ளனர். பணத்தைக் கொடுத்து இதுபோன்ற செயல்களில் சிலரைத் தூண்டி விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அரியலூர் மாவட்டத்திலும், பாமக தரப்பிலும், வன்னியர் சமூகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT