Published : 28 May 2020 10:45 AM
Last Updated : 28 May 2020 10:45 AM
கோயில்களை ஜூன் மாதத்தில் திறக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் திறக்கப்பட வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும். கரோனா ஊரடங்கால் மாநிலம் முழுவதும் அரசின் கோட்பாடுகள், வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
இருப்பினும் கரோனா பரவலின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல மாவட்டங்களில் சில தளர்வுகளும் வெளியிடப்பட்டு மக்களின் சிரமங்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது. அந்த வகையில் கோயில்களையும் திறந்தால் கோயில்களை நம்பிப் பிழைப்பை நடத்தும் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர முடியும்.
அதாவது கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் அதன் வாயில்களில், நடைபாதையில், தெருக்களில் கடை வைத்திருப்பவர்கள் வருமானம் ஈட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கோயில்களுக்குப் பயன்படுத்தப்படும் பூ, மாலை, சூடம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தமான ஆடியோ, வீடியோ கேசட்டுகள், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைத் தயாரிக்கும், விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்கள் இப்போதைக்கு தொழிலில் ஈடுபட முடியாமல் பொருளாதாரம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள். அது மட்டுமல்ல சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில், பல கோயில்களின் பூஜைகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்து சமய அறநிலையத் துறையானது கோயில்களைத் திறந்து தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட அரசின் 100 சதவீத கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த, சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
ஏனென்றால் அரசின் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி கோயில்கள் திறக்கப்பட்டால் அந்தந்த மாவட்டப் பகுதியில் உள்ள கோயில்களை நம்பி கடை வைத்திருப்பவர்கள், தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு அவர்களும் பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதோடு, அந்தந்த மாவட்டப் பொருளாதாரமும் மேம்பட்டு, மாநிலப் பொருளாதாரமும் உயரும்.
எனவே தமிழக அரசு ஜூன் மாதத்தில், மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களைத் திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களையும் அரசின் விதிமுறைகளைப் பயன்படுத்தி திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT