Last Updated : 27 May, 2020 05:58 PM

 

Published : 27 May 2020 05:58 PM
Last Updated : 27 May 2020 05:58 PM

தனியொருவராக ரூ.3.5 லட்சம் மதிப்பில் நிவாரணம்: ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தொல்லியல் ஆய்வாளர்

கோவை

கோவையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பில் மளிகைப் பொருட்கள் வழங்கி, ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடரங்கு தளர்த்தப்பட்ட போதிலும், கரோனா அச்சம் காரணமாகக் கோவை மாவட்டத்தில் இன்றளவிலும் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இன்னும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.

நிவாரணப் பொருட்கள், உணவு வழங்கும் பணிகளில் நகர்ப்புறப் பகுதிகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் கவனம் பெற்ற அளவுக்கு, கிராமப்புறங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் கவனம் பெறவில்லை.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவன் இராமேசு என்பவர், கிராமங்கள், மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 25 நாட்களாக நிவாரணப் பொருட்கள் வழங்கி, அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.

அவரிடம் பேசினோம்.

“ஊடரங்கு காலத்தில் உணவின்றித் தவித்தவர்களுக்கு அரசும், தனியார் அமைப்புகளும் ஏராளமான உதவிகளைச் செய்தன. நான் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வருவதால், கோவையில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப் பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் நிலை குறித்து நன்கறிவேன்.

போக்குவரத்து வசதி இல்லாத பழங்குடியினர் வசிக்கும் மலைக் கிராமங்கள் உள்ளன. இவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுந்தது. பல இடங்களில் ஆய்வுப் பணிக்குச் செல்லும்போது, அங்கு வசிப்பவர்களின் தொடர்பு எண்களை வாங்கி வைத்தது நினைவுக்கு வர, அவர்களைத் தொடர்பு கொண்டபோது, உணவுக்கே சிரமப்படுவதாகத் தெரிவித்தனர்.

நிவாரணப் பொருட்களை வாங்கி 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் எனப் பிரித்துப் பொட்டலம் கட்டி, காரில் எடுத்துக் கொண்டு மக்களைத் தேடிச் சென்று வழங்கினேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, இதேபோல் பல்வேறு பகுதிகளில் மக்கள் உணவுக்குச் சிரமப்படுகின்றனர் என்று. பின்னர் மொத்தமாகப் பொருட்கள் வாங்கி வீட்டில் வைத்து, குடும்பத்தினர் உதவியுடன் பொட்டலம் கட்டினேன்.

அதன்பின்னர் பொள்ளாச்சியில் சர்க்கார்பதி, நாகர் ஊத்து, சோமந்துறை, சித்தூர், ரங்க சமுத்திரம், கரட்டுப்பாளையம் ஆகிய சிறு கிராமங்களிலும், கோவையில் சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை, வீரபாண்டிபிரிவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கினேன். இப்பகுதிகளில் குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

25 நாட்களாக சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினேன். இதுமட்டுமின்றி மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர்களுக்கு ரூ.500, ரூ.1,000 என ரூ.25 ஆயிரம் வரை பண உதவியும் செய்தேன். என்னுடைய இந்தப் பணியைப் பார்த்து என்னுடைய நண்பர் ஆறுச்சாமி ரூ.16,000 மதிப்பில் அரிசி வாங்கிக் கொடுத்து, ஏழைகளுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் சில நண்பர்கள் சுமார் ரூ.20 ஆயிரம் வரை வழங்கி ஏழைகளுக்குப் பண உதவி செய்ய வேண்டினர். இவற்றையும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தேன்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று மற்றும் கோவிட்-19 நோய் பாதிப்புக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட 'ஆர்சனிக் ஆல்பம்-30' என்ற ஹோமியோபதி மாத்திரைகளை வாங்கி அரசுத் துறையினர், பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு வழங்கி வருகிறேன். இதுவரை சுமார் 2 ஆயிரம் பேருக்கும் இந்த மாத்திரைகளை வழங்கியுள்ளேன். கரோனா நேரத்தில் என்னால் இயன்ற உதவியை ஏழைகளுக்குச் செய்தது மன நிறைவளிக்கிறது” என்றார் தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவன் இராமேசு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x