Last Updated : 27 May, 2020 05:31 PM

 

Published : 27 May 2020 05:31 PM
Last Updated : 27 May 2020 05:31 PM

திருச்சி சிறையில் ஆயுள் கைதிக்கு கரோனா: உடன் தங்கியிருந்தவர்கள் உட்பட 100 பேரிடம் பரிசோதனை

பிரதிநிதித்துவப் படம்.

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 100 பேரிடம் சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை உடையவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சென்னை புழல் சிறையில் இலவச சட்ட உதவி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே, இப்பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளும் புழல் சிறையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் முன்பிருந்த சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதன்படி, திருச்சியைச் சேர்ந்த 4 கைதிகள் கடந்த 22-ம் தேதி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு உயர் பாதுகாப்பு தொகுதி-1 இல் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 40 வயதுடைய ஆயுள் தண்டனைக் கைதி ஒருவருக்கு கடந்த 24-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து திருச்சி சிறைத்துறை நிர்வாகத்துக்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவருடன் தங்கியிருந்த மேலும் 23 கைதிகள், அவருக்கு உணவு வழங்கிய கைதிகள், அவர் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள், சென்னையிலிருந்து அவரை அழைத்து வந்த போலீஸார் என 100 பேரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தி ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x