Published : 27 May 2020 02:49 PM
Last Updated : 27 May 2020 02:49 PM
மருத்துவக் கல்வியில் பறிக்கப்பட்ட 10 ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:
"இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால் அப்பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பிற பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் பேரில் இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சுமார் 10 ஆயிரம் இடங்கள் பறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதி என்பதிலோ, அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரத்திற்கும் கூடுதலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதிலோ யாருக்கும் எந்த ஐயமும் இருக்க வாய்ப்பில்லை.
இந்த வழக்கில் விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பளிக்கும் அளவுக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எனப்படுபவை தனியாக உருவாக்கப்படுபவை அல்ல. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து தான் அந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இளநிலை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் தேசிய அளவில் நீட் தேர்வு தர வரிசையின் அடிப்படையில்தான் நிரப்பப்படுகின்றன என்பதால், தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டு விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் 27% இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள் ஒதுக்கிய இடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு தேசிய அளவிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதி உடனடியாக களையப்பட வேண்டும்.
ஒருவேளை மத்திய சுகாதார அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உதாரணமாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். 27% ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
அகில இந்திய தொகுப்புக்கான இடங்களை நிரப்பும்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு பல முறை கடிதங்கள் எழுதியும் இந்த சமூக அநீதி களையப்படவில்லை.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% ஒதுக்கீடு எளிதாக கிடைத்துவிடவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைப்படி 1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட, அதன்பிறகு 15 ஆண்டுகளாகியும் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது கானல் நீராகவே இருந்து வந்தது.
2006 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் சமூக நீதித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டி நான் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே கல்வியில் 27% ஒதுக்கீடு சாத்தியமானது. அவ்வாறு போராடி பெற்ற 27% இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மறுக்கப்படுவதை சகிக்க முடியாது.
அகில இந்திய தொகுப்புக்கான இடங்களிலும் 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பாமக மேற்கொண்டு வருகிறது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய வழக்கிலும் பாமக இணைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் வரையில் காத்திருக்காமல் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நடப்பாண்டுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
அதேபோல், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களை பின்னடைவு இடங்களாக அறிவித்து, அதே எண்ணிக்கையிலான கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT