Published : 27 May 2020 02:23 PM
Last Updated : 27 May 2020 02:23 PM

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம்  ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகள் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகை ரூ.7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி வட்டக்குழு செயலாளர் லெனின்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் முழங்கினர்.

இதேபோல், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊரடங்கு காலத்தில் நெல், மலர், பழங்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த உதவும் வகையில் பணி வழங்க வேண்டும்.

பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவித் திட்டத்தில் வழங்கும் தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று கரோனா உதவியாக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்படுவதே உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராமசுப்பு தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x