Published : 27 May 2020 03:13 PM
Last Updated : 27 May 2020 03:13 PM
வழக்கமாக பச்சை நிறத்தில் நெற்பயிர்களைப் பார்த்து பழக்கப்பட்ட நம் கண்களுக்கு ஊதா நிறத்தில் விளையும் நெற்பயிர்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. புதுச்சேரி அருகே ஊதா நிறத்தில் விளையும் பாரம்பரிய சின்னார் நெற்பயிரை பட்டதாரி விவசாயி விளைவித்து வருகிறார்.
புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியை ஒட்டியுள்ள கரிக்கலாம்பாக்கத்தில் மென்பொருள் பொறியியல் படித்து விட்டு விவசாயப் பணிகளைச் செய்து வருகிறார் விஜயகுமார். அவரது நிலத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிரைப் பார்த்தால் பலரும் வியக்கின்றனர். வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் நெற்பயிற்கள் இவர் நிலத்தில் ஊதா நிறத்தில் உள்ளன.
இதுபற்றி விவசாயி விஜயகுமார் கூறுகையில், "தமிழகப் பகுதியிலிருந்து ஊதா ரக நெற்பயிர் விளைவதைப் பார்த்தேன். அதை அங்கிருந்து வாங்கி வந்து பயிரிடுகிறேன். மூலிகை சக்தி கொண்ட இந்த நெற்பயிர் பெயர் சின்னார். 135 நாட்கள் வயது கொண்ட இப்பயிரை முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு விவசாயம் செய்துள்ளேன். அதிக காற்று வீசினாலும் பயிர் சாய்வது இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
விளையும் நெற்பயிர் வளரும்போது கத்தரி ஊதா நிறத்திலும் அறுவடையின்போது ரோஜா நிறத்திலும் இருக்கும். ஒரு கதிரில் 100 நெல் மணி வரை இருக்கும். நிச்சயம் ஏக்கருக்கு 40 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும்.
நெல்மணிகளை கைகுத்தல் மூலம் அரிசியை எடுத்து அதை உணவாகச் சாப்பிட்டு வருகிறோம். ஏனெனில் நெல்லை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து அதன் மூலம் முழுவதுமாக பட்டை தீட்டினால் அதிலுள்ள சத்துகள் அனைத்தும் வீணாகிவிடும். அதேநேரத்தில், ரசாயன உரம் போட்டு விளைவிப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதால் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
பாரம்பரிய பயிர் தொடர்பாக வேளாண் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பரமக்குடி முதுகுளத்தூரின் கீழ்மானங்கரை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பம் என்பவர், ஆடுதுறை ரக விதை நெல்லைப் பயிரிட்டபோது பச்சை நிறப் பயிர்களுக்கு நடுவில், கத்தரி ஊதா நிறத்தில் ஒரு பயிர் இருந்தது. அறுவடையின்போது ரோஜா நிறத்தில் மாறியது.
இதைத் தனியாக அறுவடை செய்து மீண்டும் பயிர் செய்தார். முதுகுளத்தூர் வேளாண் அதிகாரிகள் இதற்கு 'சின்னார்' எனப் பெயரிட்டனர். அகமதாபாத்தில் உள்ள தேசியக் கட்டுபிடிப்பு நிறுவனம் புஷ்பத்துக்கு காப்புரிமை வழங்கியது" என்று தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ஊதா நிற நெற்பயிரைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT