Published : 27 May 2020 01:57 PM
Last Updated : 27 May 2020 01:57 PM
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் நுழைந்து உணவுப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வேளாண் நிபுணர்கள் கூறி வரும் நிலையில், உணவுப் பஞ்சம் ஏற்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா விடுத்துள்ள அறிக்கை:
“ Locust swarms attack என்றழைக்கப்படும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டமாகப் படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நம் புவியில் நடந்து வருகிறது. பாலைவனப்பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
இதற்கு முன்னர் இப்படியான சம்பவங்கள் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. சரியாக 26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்தது. நடப்பாண்டு பிப்ரவரி வரைக்கும் அது தொடர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந்தன. சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் தற்போது வெட்டுக்கிளிகள் செய்த அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்கள் ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டன.
இந்தத் தானியங்கள் சேதமடையாமல் அறுவடை செய்யப்பட்டிருந்தால் ஓராண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க உதவியிருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த வெட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்து பயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது அண்டை நாடான பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து உணவு தானியங்களை அழித்து விட்டு, தற்போது மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் நுழைந்து உணவுப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வேளாண் நிபுணர்கள் கூறி வரும் நிலையில், வழக்கம் போல் தமிழக வேளாண் அதிகாரிகள் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழையாது என ஆருடம் கூறி வருகின்றனர்.
கரோனா விவகாரத்திலும் இதேபோன்று கூறி வந்து தற்போது தமிழகத்தின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். ஒட்டுமொத்த இந்தியாவும் கரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுப்பதற்கான பணிகளை வேகப்படுத்தாவிட்டால் மிகப்பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவிற்கான பாதிப்புகள் உண்டாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே, இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு ஒட்டுமொத்த உணவுப் பயிர்களையும், விவசாயிகளையும் காக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT