Published : 27 May 2020 01:04 PM
Last Updated : 27 May 2020 01:04 PM
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜாக்சன் பொது முடக்கத்தால் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பமுடியாமல் இருந்தார். சிறப்பு விமானச் சேவை தொடங்கியதும் சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து சேர்ந்தவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டார். தனிமையில் இருந்தவாறே பல்வேறு நோய்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார். இது பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.
சமீபத்தில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் கரோனா பரிசோதனைகள் குறித்தும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டிருந்தார் ஜாக்சன். அதில், கரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை அவர் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசுக்குக் களங்கம் விளைவித்ததாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் மருத்துவர் ஜாக்சன் மீது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஜாக்சனிடம் கேட்டபோது, “மஸ்கட்டில் இருந்து என்னோடு திரும்பிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். அதில் மூவருக்கு கரோனா தொற்று இருப்பதாகச் சொன்னார்கள். நான் மருத்துவர் என்பதால் முடிவுகளை வாங்கிப் பார்த்தபோது அதில் பார்பிகோ வகை வைரஸ் இருப்பதாக இருந்தது. பார்பிகோ என்பது குடும்பத் தலைவர்தான். அது இருப்பதாலேயே கரோனா இருப்பதாக முடிவு அல்ல என என் அனுபவத்தில் மருத்துவ அறிவை முன்வைத்துதான் பேசினேன்.
தமிழக முதல்வருக்கு மருத்துவ அதிகாரிகள் கரோனாவின் உண்மையான நிலையைச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தியதால் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். நான் அக்கறையின் பேரில் சொன்ன அறிவுரைகளை தவறாகப் புரிந்துகொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் “ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT