Published : 27 May 2020 12:40 PM
Last Updated : 27 May 2020 12:40 PM
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று முதல் தள்ளுவண்டிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைத் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளுக்கான விதிமுறைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஷ்ரவன் குமார் ஜடாவத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே நடத்த வேண்டும். தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் செயல்படும் தள்ளுவண்டிக் கடைகளின் அனுமதி ரத்து செய்யப்படும். தள்ளுவண்டிக் கடைகளுக்கு அன்றாடம் கிருமிநாசினி தெளித்து அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும். சாலையோரத்தில் அமைந்துள்ள தள்ளுவண்டிக் கடைகளுக்கு இடையில் குறைந்தது நான்கு மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தள்ளுவண்டிக் கடைகளின் அருகில் சாப்பிட வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது. பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். கடை உரிமையாளர்கள் முடிந்தவரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடைகளில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்களுக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. முதியவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருப்பின் தள்ளுவண்டிக் கடைகளை நடத்தக் கூடாது. அவ்வாறு அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT