Published : 26 May 2020 09:28 PM
Last Updated : 26 May 2020 09:28 PM

ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி

ஊரடங்கு கால நிவாரணம் ரூ.20 ஆயிரம் வழங்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க வடக்கு மாவட்ட செயலாளர் எம். ரவீந்திரன், இணைச்செயலாளர் கே.சக்திவேல், துணைச்செயலாளர் பி.செந்தாமரைக்கண்ணன், பொருளாளர் ஜி.வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

அவர்கள், தமிழகம் முழுவதும் 50 சதவீத பயணிகளுடன் கார் மற்றும் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வலியுறுத்தியும், ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், வாடகை கார், ஆட்டோக்களின் தகுதிச்சான்று ஓட்டுநர் உரிமம் பர்மிட் ஆகியவற்றுக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய 2 காலாண்டு வாகன சாலை வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவு செய்த வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் 50 சதவீத பயணிகளிடம் தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். வாகன தவணைகளை கட்டுவதற்கு 6 மாத காலம் ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. இந்தக் காலத்தில் பொது போக்குவரத்துக்காக வாங்கப்பட்ட வாடகை கார், ஆட்டோக்கள் மற்றும் சுமை வேன்கள் மீதான கடன்களுக்கு எவ்வித தடையும் அபராதமும் விதிக்க கூடாது.

ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் ஓடாது நாட்களை கணக்கில் எடுத்து இன்சூரன்ஸ் தேதியை நீட்டித்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒப்படைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, என தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x