Published : 26 May 2020 07:11 PM
Last Updated : 26 May 2020 07:11 PM
மேட்டூர் அணை உபரி நீர்த் திட்டம் என்ற பெயரில், காவிரி டெல்டா அழிந்து போகும் வகையில் பிராந்திய உணர்வோடு முதல்வர் செயல்படுவதாகத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பகிங்கிரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், "தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகக் காவிரி விளங்குகிறது. தமிழக உணவுப் பொருள் தேவையில் சுமார் 40 சதவீதம் டெல்டாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 11 மாநகராட்சிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. 50 ஆண்டு காலம் போராடிக் காவிரியில் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் தமிழகப் பொதுப் பணித்துறை, மேட்டூர் உபரி நீர்த் திட்டம் என்ற பேரில் சட்டவிரோதமாக புதிய நீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
மேட்டூர் அணை முதல் கிருஷ்ணராஜ சாகர் வரை கர்நாடகமோ, தமிழகமோ புதிய நீர்ப் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்பது அமலில் இருக்கும் விதி. காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அணைகளின் நிர்வாகக் கட்டுப்பாடுகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதுவாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
அப்படி அனுமதி கேட்பவர்களுக்குக் கீழ் பாசன விவசாயிகள் கருத்தைக் கேட்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியும் வழங்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் மேட்டூர் உபரி நீர்த் திட்டம் என்ற பேரில் சட்டவிரோதமாக, புதிய நீர்ப் பாசனத் திட்டத்தை தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தி வருகிறார்கள்.
குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையிலிருந்து பெரும் பகுதியான நீரை இறைவைப் பாசனம் மூலம் எடப்பாடி தொகுதி உள்ளிட்ட சேலம் மாவட்டப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உள்ளனர். அங்கு பாசனப் பரப்பை உருவாக்கி தோட்டப் பயிர் சாகுபடியைத் தீவிரப்படுத்த உள்ளனர். அங்குள்ள ஏரி குளங்களில் இந்த நீரைக் கொண்டு சென்று நிரப்பி பாசனத்துக்கு பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் டெல்டாவை முடக்கும் வகையில் பிராந்திய உணர்வோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
இப்பணி நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும். விவசாயம் பேரழிவைச் சந்திக்கும். 5 கோடி மக்களின் குடிநீர் பறிபோகும். டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். எனவே, டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் உபரி நீர்த் திட்டத்தைக் கைவிட முதல்வர் முன்வர வேண்டும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பை மீறும் வகையில் அவமதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசே ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக கர்நாடகம் மேகேதாட்டு அணை கட்டும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு மறைமுகமாகத் துணை போகிறதோ எனவும் அஞ்சத் தோன்றுகிறது.
தமிழக முதல்வர் இந்தத் திட்டத்தைக் கைவித்ட தவறும் பட்சத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். காவிரி டெல்டாவைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து, காவிரி டெல்டாவைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT