Published : 26 May 2020 06:27 PM
Last Updated : 26 May 2020 06:27 PM

எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

எரிவாயு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான சிவக்குமார் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்குத் தேவையான முகக் கவசம், கிருமிநாசினி கையுறை போன்றவற்றை வழங்க மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த பதில் மனுக்களில், “கிடங்குகளில் சிலிண்டர் நிரப்புவது மற்றும் டெலிவரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்க வேண்டுமென அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவச் செலவுக்கான ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு தொகையும், ஒருவேளை மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் கருணைத் தொகையும் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதற்கான ஒப்பந்தங்களில் அனைத்து விநியோகஸ்தரும் கையெழுத்திட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேற்கொண்டு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறிய நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கதிரேசன், மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் வி.ஆனந்த நடராஜன், தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x