Last Updated : 26 May, 2020 04:52 PM

 

Published : 26 May 2020 04:52 PM
Last Updated : 26 May 2020 04:52 PM

வாசிப்புப் பழக்கத்துக்குக் கை கொடுத்த கரோனா: புத்தகக் கடைகளுக்குப் படையெடுக்கும் மதுரை மக்கள்

பொதுமுடக்கம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த புத்தகக் கடைகள் மதுரையில் கடந்த 2 வாரமாக படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு வாசகர்கள் வரத் தொடங்கி இருக்கிறார்களா? என்று அறிந்துகொள்ள மதுரையில் ஒரு ரவுண்ட் அப் போனோம்.

உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பொதுவாக மதிய நேரத்தில் புத்தகக் கடைகள் காத்து வாங்கும். ஆனால், இப்போது ஒவ்வொரு கடையிலும் குறைந்தது இரண்டு, மூன்று வாசகர்களாவது இருந்தார்கள்.

சர்வோதயா இலக்கியப் பண்ணை பொறுப்பாளர் வே.புருஷோத்தமனிடம் கேட்டபோது, "கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்திலேயே சில வாசகர்கள் ஆர்வமுடன் புத்தகம் கேட்டு போன் போட்டார்கள். ஆனால், திறக்க முடியாத நிலை. கடை திறந்ததும் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் கடைக்கு வந்தார்கள். குறிப்பாக கல்கி, சாண்டில்யன் போன்ற பழைய எழுத்தாளர்களின் நாவல்களைப் படிக்கிறவர்கள், சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் போன்ற வெகுஜன எழுத்தாளர்களுடைய வாசகர்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள்.

தீவிர வாசிப்பாளர்கள் வழக்கம் போல வருகிறார்கள். பேருந்து இயக்கப்படாததால், ஊழியர்கள் அனைவருமே சொந்த வாகனத்தில்தான் பணிக்கு வர வேண்டியது இருக்கிறது. நானே தினமும் காரியாபட்டியில் இருந்து பைக்கில்தான் மதுரைக்கு வருகிறேன். எனவே, அவ்வாறு பைக்கில் வருகிற ஊழியர்களுக்கு பயணப்படியாக தினமும் ரூ.100 வழங்குகிறோம்" என்றார்.

ஜெயம் புக் சென்டர் நிர்வாகி ஆர்.ராஜ் ஆனந்திடம் கேட்டபோது, "எங்கள் கடையைப் பொறுத்தவரையில் வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களும், கைடுகளும்தான் விற்பனையில் உச்சத்தில் இருக்கும். இந்த முறை அவற்றின் விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு கைடுகள்தான் நன்றாகப் போகின்றன.

வழக்கமாகப் பொதுப் புத்தகங்களின் விற்பனை இந்த மாதங்களில் ரொம்ப மந்தமாக இருக்கும். ஆனால், இப்போது நிறையப் பேர் ஆர்வமுடன் வந்து புத்தகம் வாங்குகிறார்கள். வழக்கறிஞர் ஒருவர் இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றார். இன்னும் சில புத்தகங்களைக் கேட்டிருக்கிறார். இப்படி தினமும் ஒரு வாசகரைப் பார்த்தாலே உற்சாகம் வந்துவிடுகிறது" என்றார்.

என்.சி.பி.எச். புத்தக நிறுவன ஊழியர் பழனிவேல் கூறுகையில், "வழக்கமாக மே மாதத்தில் எங்களுக்கு ஸ்டாக் எடுக்கிற வேலைதான் இருக்கும். வாசகர்கள் வருகை குறைவாகவே இருக்கும். ஆனால், இந்தாண்டு ஆச்சரியமாக வாசகர்கள் வருகிறார்கள். நிறையப் புத்தகம் வாங்குகிறார்கள்" என்றார்.

இந்த வாசிப்பார்வம் அப்படியே தொடர்ந்தால், இதுவரையிலான நஷ்டத்தை ஓரளவுக்கேனும் ஈடுகட்டிவிடலாம் என்று பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் நம்புகிறார்கள். ஆனால், வாசகர்களிடம் பணப் புழக்கம் குறைந்து விட்டதே?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x