Published : 26 May 2020 02:53 PM
Last Updated : 26 May 2020 02:53 PM
மேலும் ஊரடங்கை நீட்டிப்பதினால் எவ்வித உருப்படியான பலனும் கிடைக்காது. மக்கள் தாங்களே உணர்ந்து, தங்களைக் கட்டுப்பாடான நியதிகளுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். அரசு அதற்கான பணியைச் செய்யவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“இந்திய நாட்டு அளவிலும், நமது மாநிலமான தமிழ்நாட்டு அளவிலும், வெளி மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து மூன்று ஊரடங்குகளுக்குப் பிறகும்கூட அது குறைந்தபாடில்லை. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் கவலையளிக்கிறது. முழுக்க முழுக்க அறிவியல் - உளவியல் ரீதியாக அணுகவேண்டிய ஒரு தீர்வு - தடுப்பு முறைகளுக்குப் பதிலாக, மத்திய அரசு, ‘‘கை தட்டுங்கள், பால்கனியில் விளக்கு ஏற்றுங்கள்’’ என்றெல்லாம் கூறியது.
நமது மாநில முதல்வர் உள்பட பலர் இதனைப் பின்பற்றத் தவறவில்லை. கரோனா நோய்த் தொற்று நாளும் இப்போது மேலும் மேலும் மிக அதிகமாகியுள்ள நிலையில், மத்திய அரசின் சுகாதாரத் துறையின் பேச்சாளர்கள், ‘‘கரோனாவுடன் வாழ்ந்து தீர நாம் பழகிடவேண்டும்.
வாழ்ந்து தீருவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கைபிசைந்த நிலையில் கூறினாலும், மருத்துவப் பரிசோதனைக் கருவிகளையும், சோதனைக் கூடங்களையும் அதிகப்படுத்தி வருவது நம் மக்களுக்கு சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டக் கூடியவையாகவும் உள்ளது. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்றெல்லாம் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அதுபோலவே அது எங்கிருந்து பரவியது? எப்படி? யார் யார் கூட்டிய பெருங்கூட்டத்தால் நடந்தது என்று பரஸ்பர புகார்களுக்கு இது நேரமும் அல்ல; தேவையும் இல்லை. இப்போது அவசரத் தேவை சரியான தடுப்பும், உரிய நிவாரணமுமே ஆகும். இனி நடப்பவை நல்லவையாகட்டும்.
நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினர், தரப்பினர், எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி- கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பேதாபேதமின்றி கலந்துரையாடி, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியுடன் நடத்தும் தொடர் போரின் ஒரு சிறந்த கூட்டு முயற்சியாக நடத்திட போதிய முயற்சிகளுக்கான சரியான இணைப்பு இல்லாதது வேதனைப்பட வேண்டியதாகும்.
கடந்த கால அனுபவத்திலிருந்து ஒன்றை மத்திய - மாநில அரசுகள் புரிந்து, இனி கரோனாவை எதிர்கொண்ட மக்கள் தம் வாழ்வை அமைத்துக் கொள்ளவே ஆழ்ந்து யோசித்து திட்டமிடல் வேண்டும். அனைத்து மக்கள் பசி தீர்த்தல், வேலை வாய்ப்பை உருவாக்கி வறுமையை ஒழித்தல் இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்து சிந்திக்கவேண்டும்.
மூன்று ஊரடங்குகளையும் தாண்டி கரோனா பாதிப்பு கூடுதலாகி வரும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களும், உதவிகளும் அடித்தட்டு மக்களாகிய தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட - அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை - எளிய மக்களின் இன்னலை - வறுமையைத் தீர்க்கும் வகையில் அமையவில்லையே என்று பல நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அச்சு ஊடகங்களில் ஏராளமான கட்டுரைகள் ஆக்கபூர்வ யோசனைகளுடன் வெளிவருகின்றன. இவற்றை ஆட்சியாளர்கள் படித்து அசை போட்டுச் சிந்தித்து செயலாற்றினால் நல்ல பயன் விளையும் என்பது நமது வேண்டுகோள்.
அறிவியல் மனப்பாங்கை (சயிண்ட்டிபிக் டெம்பர்) மக்கள் மத்தியில் பரப்பி, மருத்துவத் துறையில் மக்களின் அறிவுத் தேடல் பெருகி, அறியாமையை, மூடநம்பிக்கைகளை விரட்டி, தன்னம்பிக்கையைப் பெருக்கி வாழ வைப்பதே இப்போதைய முக்கியத் தேவையாகும்.
மேலும் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதினால் எவ்வித உருப்படியான பலனும் கிடைக்காது; மக்கள் தாங்களே உணர்ந்து, தங்களைக் கட்டுப்பாடான நியதிகளுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், மனோதத்துவ ரீதியாக மக்கள் பலவீனப்பட்டு விடுவார்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசு இவற்றுக்கிடையே நல்ல புரிதலோடு - ஒருமித்த ஒருங்கிணைப்பு முடிவுகளும் முக்கியம். ரயில்வே சேவை வேண்டாம் இம்மாதம்வரை என்று தமிழ்நாடு அரசு கூறியது. விமானச் சேவையும் இப்போது தமிழ்நாட்டுக்குள் தேவையில்லை என்று கூறியது.
ஆனால், மத்திய அரசு இதை காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு வேறு வழியின்றி 25 விமானங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு வரலாம் என்ற ஒரு தனிக் கட்டுப்பாட்டினைத்தான் அதனால் அறிவிக்க முடிந்தது.
மாநில அரசுகளை - தாராளமாக முடிவு எடுக்கவிட்டு, மத்திய அரசு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருக்கவேண்டியதற்கு மாறாக, இதில் தலைகீழ் அணுகுமுறையே தொடக்கத்திலிருந்து பின்பற்றப்படுவது, அறம் சார்ந்தும் சரி, அரசமைப்புச் சட்ட உரிமைகள் சார்ந்தும் சரி - ஏற்கத்தக்கதல்ல.
நிதி உதவிகளுக்குக்கூட - ‘தேசிய பேரிடர்’ என்று அறிவித்த நிலையிலும்கூட, இப்போது மாநில அரசுகளுக்கு நிபந்தனைச் சங்கிலி இணைப்பது எவ்வகையிலும் சரியல்ல என்று பல மாநில முதல்வர்களே தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மேலும், கரோனா பரிசோதனை - ஆய்வுகளைப் பலப்படுத்தி, மக்களை அவர்களது சுயக் கட்டுப்பாட்டின் தேவைகளையும் அறிவுறுத்தி, அன்றாடப் பணிகள் - வாழ்வாதாரத்திற்குரியவை என பல்வேறு நிபந்தனைகளோடு. அனுமதிக்கப்படுவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையவேண்டும்.
தமிழக அரசு இதில் ஆக்கபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்க இதுவே சரியான தருணம்”.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment