Published : 26 May 2020 01:17 PM
Last Updated : 26 May 2020 01:17 PM
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்துப்பணிகள், தூர்வாரும் பணிகளை கண்காணிக்க தமிழக அரசால் தஞ்சாவூர் மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும், தமிழக வேளாண் துறைச் செயலருமான ககன்தீப்சிங் பேடி இன்று காலை (மே 26) தஞ்சாவூர் மாவட்டத்தில் வாளமர்கோட்டை, கண்ணந்தங்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கல்யாணஓடை வாய்க்காலில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:
வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நலனுக்காக, தண்ணீர் வரும்போது அனைத்து வாய்க்கால்களும் தூர்வார தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து பணிகள் மற்றும் ஏ,பி., வாய்க்கால் தூர்வாரிட தமிழக அரசு ரூ.567 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் தமிழக அளவில் தூர்வார ரூ.67 கோடியும், குடிமராமத்துக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் 274 பணிகள் பொதுப்பணித்துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணியோடு, 100 நாள் வேலை திட்டத்தின் கீழும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எங்களது நோக்கம் பாசனத்துக்கு தண்ணீர் வருவதற்குள் அனைத்து ஏ,பி., வாய்க்கால்கள் நல்ல தரமாக தூர்வார வேண்டும், அதற்காக ஒரு கண்காணிப்பு அலுவலரை மாவட்டத்துக்கு ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு தற்போது பணிகளை கண்காணித்து வருகிறேன்.
குறிப்பாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் போய் சேர வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாளை (மே 27) வெண்ணாறு பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது என்றார்.
ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகளி உடனிருந்தனர்.
படவிளக்கம்: தஞ்சாவூர் மாவட்டம் வாளமர்கோட்டையில் கல்யாணஓடையில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை கண்காணிப்பு சிறப்பு அலுவலரும் வேளாண் துறைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் பலர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT