Published : 26 May 2020 11:12 AM
Last Updated : 26 May 2020 11:12 AM
4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது. மூன்று கட்ட ஊரடங்கு முடிந்து மே 31 வரை 4-ம் கட்ட ஊரடங்கு தொடர்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக அரசு அறிவித்தது. ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த உத்தரவிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கு பெற்றோர், குழந்தைகள் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே போன்று மூடப்பட்ட பள்ளிகள் குறித்தும் அரசு முடிவெடுக்க உள்ளது. பொதுப்போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் பள்ளிகளை திறப்பது சிக்கலாக இருக்கும்.
இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுப்பதற்காக இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் தொற்று பரவுவதால் இவையெல்லாம் ஆலோசனைக் கூட்டத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT