Published : 26 May 2020 08:57 AM
Last Updated : 26 May 2020 08:57 AM

கலை ரசனையை வளர்க்க இலவச பயிற்சி: இணையத்தில் சொர்ணமால்யாவின் கலைப் பணி

சென்னை

யுகன்

பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் சொர்ணமால்யா கணேஷ், ‘ஃப்ரம் தி அட்டிக்’ எனும் தனது முகநூல் பக்கம் வழியாக பல்வேறு கலைகளையும் ரசனையோடு அணுகும் நேர்த்தியை வாரம்தோறும் இலவச பயிற்சியாக வழங்கி வருகிறார். ஊரடங்கு தொடங்கியது முதல், இப்பணியை அவர் செய்துவருகிறார். இதுகுறித்து நம்மிடம் அவர் கூறியதாவது:

முனைவர் பட்டத்துக்காக பரதநாட்டியக் கலையில் நான் செய்த ஆராய்ச்சியை ஒட்டி, நடனக் கலையில் இருந்து விலகி இருப்பவர்களிடமும் அதன் சிறப்புகளை பகிர்ந்துகொள்ள ஏற்படுத்திய முகநூல் பக்கம்தான் ‘ஃப்ரம் தி அட்டிக்’ (https://www.facebook.com/pg/fromtheatticperformanceseries/photos/?ref=page_internal). கடந்த மார்ச்சில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து 28 நாட்கள் தனிமையில் இருந்தேன். அப்போது, பல கலைகளை ரசனையுடன் அணுகும் பயிற்சியை என் மாணவர்களுக்கு மட்டும் அளிக்க நினைத்தேன். பிறகு, எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வாரம்தோறும் சனி, ஞாயிறு இரவு 9 மணிக்கு இணையத்தில் இலவசமாகவே பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். நாட்டியம், எழுத்து, இலக்கியம், கவிதை, ஓவியம் என எந்தக் கலையை விரும்புவோருக்கும் ரசனையை விரிவாக அலசும் பயிற்சியாக இதை வடிவமைத்தேன்.

தன்னிலை மறப்பது குறித்து சம்ஸ்கிருதத்தில் நிறைய பதிவுகள் உள்ளன. அதை எளிமையான தமிழ், ஆங்கில உரைகள் மூலம் விளக்கினேன். கலையை எப்படி நுட்பமாக, கலைநயத்தோடு அணுகுவது என்னும் புரிதலை ஒரு பயிற்சியாக அளித்தேன். மெலட்டூர் பாகவத மேளா, கேரளாவின் தெய்யம் போன்ற தன்னிலை மறந்த கலைகளின் ஈடுபாடுகள் குறித்த பக்தி நெறி, பரதநாட்டியத்துக்கு தஞ்சை நால்வரின் பங்களிப்புகள் குறித்து பேசினேன். சதிர் ஆட்டம் குறித்து ஒரு வாரம் பேசினேன். சதிர் ஆட்ட நிபுணர் ஆசிஷ் ரமேஷ் டேன் ஜோர்கர் அதன் பழமை குறித்து என்னுடன் பேசினார். பயிற்சியில் பங்கெடுத்த பலரும், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றி விட்டீர்கள் என்று பாராட்டினர். ஒவ்வொரு வீடியோவையும் 25 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

10 வாரங்களுக்குப் பிறகு, இதில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டே இணையவழி கருத்தரங்கு (webinar) நடத்தினோம். கட்டிடக் கலை நிபுணர்கள், இசைக் கலைஞர்கள் என பலரும் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும்போல, இம்முறை தஞ்சை நால்வரின் இசை, நடனம் குறித்த பயிற்சிப் பட்டறையை (Ripples of The Quartette An Immersion Workshop) இணையத்தில் நடத்துகிறோம். நால்வரில் ஒருவரான பொன்னையா பிள்ளையின் பேரன் சிவகுமார் சிவானந்தம் இசைப் பயிற்சி அளிக்கிறார். நான் நாட்டியப் பயிற்சி அளிக்கிறேன். உலகெங்கும் உள்ளவர்கள் நமது பாரம்பரிய பரதநாட்டிய முறையை இணையம் வழியாக கற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம். கலை குறித்த தேடல் பரவ வேண்டும். அதற்கான சிறு பங்களிப்புதான் இது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x