Published : 26 May 2020 08:34 AM
Last Updated : 26 May 2020 08:34 AM

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் மும்பையில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: தமிழக அரசுக்கு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை

தமிழகம் திரும்புவதற்காக மும்பை ரயில் நிலையம் வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்.

சென்னை

மும்பையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஊரடங்கால் மும்பையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், அவை பெரும்பாலும் இணையவழி சேவையாக இருப்பதால், படிப்பறிவில்லாத புலம் பெயர்ந்த தமிழர்களைச் சென்றடையவில்லை.

இவர்களை மீட்டு தமிழகத்துக்கு அனுப்பும் மகத்தான பணியை ‘ஹங்கர் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பல்வேறு தொண்டு அமைப்புகளுடன் இணைந்து, மேற்கொண்டு வருகிறது. இவர்களின் நடவடிக்கையால் மும்பையில் இருந்து 1,600 பேர் ரயில்கள் மூலம் நேற்று தமிழகம் வந்தனர். இதுதொடர்பாக ‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பின் நிறுவனர் ராஜஸ்ரீ சாய் கூறியதாவது:

மும்பையில் கட்டுமானப் பணிகள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை, அதாவது மே மாதம் வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் தமிழர்கள் மும்பை சென்று வேலை செய்வர். ஊரடங்கால் மார்ச் முதலே வருவாய் இழப்பை எதிர்கொண்டனர். இதையறிந்து ‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பு சார்பில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவர்களில் 1,600 பேர் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்தவர்களை சொந்த ஊர் அனுப்பும் நடைமுறை குறித்து அரசுத் துறைகளிடமிருந்து உரிய தகவல்கள் கிடைப்பதில்லை.

இதற்கிடையே ரயிலில் வந்த தமிழர்களுக்கு 24-ம் தேதி பிற்பகல் மதிய உணவு கிடைக்கவில்லை என தகவல் கிடைத்தது. உடனே சென்னையில் உள்ள ‘பூமிகா’ என்ற அமைப்பைத் தொடர்புகொண்டோம். அவர்கள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மூலமாக ஆந்திர மாநில டிஜிபியை தொடர்பு கொண்டு, 1,600 பேருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பின் ஆலோசகர் சியா ஹஜீபோய் கூறும்போது, ‘‘தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள், மும்பையில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை மீட்க வேண்டும். அதற்கேற்ப போதிய ரயில்கள் இயக்க வேண்டும். தமிழகம் வரும் தொழிலாளர்களை அரசு முகாமில் தனிமைப்படுத்துவதற்கு பதில், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும்’’ என்றார்.தமிழகம் திரும்புவதற்காக மும்பை ரயில் நிலையம் வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x