Published : 26 May 2020 07:23 AM
Last Updated : 26 May 2020 07:23 AM

மணமகனுக்கு இ-பாஸ் கிடைக்காததால் கேரள - தமிழக எல்லை சோதனைச்சாவடியில் திருமணம்: மணமக்களை பிரித்துவைத்த ஊரடங்கு

இ-பாஸ் கிடைக்காததால் தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்.

தேனி

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி சுப்பிரமணியன்கோவில் தெருவைச் சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25). இவருக்கும், கேரள மாநிலம், கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் காயத்ரிக்கும் (19) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாறு வாளார்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளா செல்ல மணமகன் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.இந்நிலை யில், மணமகனும், மணமகளும் தங்களின் உறவினர்களோடு குமுளி சோதனைச்சாவடிக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர். அங்கிருந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர் களிடம், திருமணத்துக்குச் செல்ல மணமகனை அனுமதிக்குமாறு கோரினர். இ-பாஸ் இல்லாமல் செல்ல முடியாது என்று கேரள போலீஸார் கூறிவிட்டனர்.

முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளின் அறிவுரைப்படி, சோதனைச்சாவடி அருகிலேயே திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதையடுத்து பிரசாந்த் - காயத்ரி திரு மணம் நடைபெற்றது. உறவினர்கள், போலீஸார், வருவாய்த் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் மணமக் களை வாழ்த்தினர்.

பின்னர், மணமகனும், மணமகளும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x