Published : 25 May 2020 05:08 PM
Last Updated : 25 May 2020 05:08 PM
தொழிலாளர் வேலை நீக்கம், சம்பள வெட்டு உள்ளிட்ட அநீதிகளை நிறுவனங்கள் கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா தொற்றுப் பாதிப்பால் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்தக் கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அதைப்போன்று, ஒவ்வொரு தொழிலிலும் அங்கமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களும் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
அரசு அறிவிக்கும் சலுகைகள் எதுவும் இந்தத் தொழிலாளர்களைச் சென்று சேரவில்லை. இந்நிலையில், பல நிறுவனங்கள் கரோனா பாதிப்பை முன்னிறுத்தி தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது, சம்பளமில்லா கட்டாய விடுப்பு அளிப்பது, வேலையை விட்டு நீக்குவது என்பது போன்ற கருணையற்றதும், சட்ட விரோதமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது ஏற்க முடியாததும், கடும் கண்டனத்துக்குரியதுமாகும்.
ஒவ்வொரு நிறுவனமும், கடந்த காலங்களில் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே முன்னேற்றம் அடைந்திருப்பதோடு பெரும் லாபத்தையும் ஈட்டியிருக்கின்றன. அப்போதெல்லாம் லாபத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என்று கூடுதல் வருவாயை யாரும் அள்ளிக் கொடுத்து விடவில்லை.
ஆனால், நெருக்கடி என்று வந்ததும், ஒட்டுமொத்தச் சுமையையும் தொழிலாளிகள் தலையில் சுமத்தி வீட்டுக்கு அனுப்புவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.
தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான சலுகைகளை அரசாங்கத்திடம் கோரும்போது தொழிலாளர்களுக்கான சம்பளம் முழுவதையும் அரசே தர வேண்டும் எனக் கோருவதே நியாயமான அணுகுமுறையாக இருக்கும். பல்வேறு நாடுகளில் சம்பளம் மட்டுமன்றி தொழிலாளர்களுக்கான ஒட்டுமொத்தச் செலவையும் அரசுகளே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் 80 சதவிகிதம் வரை தொழிலாளர் சம்பளங்கள் இவ்வாறு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில், முழுமையான நிவாரணத்திறகு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவதற்கு மாறாக, ஏற்கெனவே கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்களை வதைக்கும் விதமாக வேலை நீக்கம் செய்வது, சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்தகைய நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT