Last Updated : 25 May, 2020 04:51 PM

 

Published : 25 May 2020 04:51 PM
Last Updated : 25 May 2020 04:51 PM

திருமணத்துக்கு முதல் நாளன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட பெண்: சேலம் ஆட்சியரின் நடவடிக்கையால் திருமணம்

திருமணத்துக்குப் பின்னர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய சுகாதாரத் துறையினர். 

சேலம்

ஜனவரி மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு, திருமணத்துக்கு முதல் நாளன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இக்கட்டான நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் மனிதாபிமான நடவடிக்கையால், அந்தப் பெண்ணுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியைச் சேர்ந்த இளைஞருக்கும் மே 24-ம் தேதி கெங்கவல்லியில் திருமணம் செய்வதற்கு, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த ஜனவரி மாதம் நிச்சயம் செய்திருந்தனர். இந்நிலையில், திருமணத்துக்காக, மணப்பெண்ணாகிய இளம்பெண், அவரது பெற்றோர் உள்ளிட்டோர் காரில் கெங்கவல்லிக்கு புறப்பட்டனர்.

சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மணப்பெண்ணுக்கு அறிகுறிகள் ஏதுமின்றி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, மணப்பெண்ணுக்கு சிகிச்சை முடிந்த பின்னர் திருமண ஏற்பாட்டினை செய்து கொள்ள வலியுறுத்தினர்.

ஆனால், நிச்சயித்த திருமணத்தை ஒத்தி வைப்பது, தடையாக இருக்கும் என்றுகூறி, திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மணப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தும், மணமகனும் திருமணத்துக்கு சம்மதிக்கவே, இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இளம்பெண்ணின் எதிர்கால வாழ்க்கையின் நலன்கருதி, ஆட்சியரும் சில நிபந்தனைகளுடன் திருமணத்துக்கு அனுமதியளித்தார். அதன்படி, மணமக்கள், அவர்களது பெற்றோர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி பங்கேற்க, மிகவும் எளிமையான முறையில் நேற்று (மே 24) காலை திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின்னர் மணப்பெண்ணை, அவரது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி, கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மணமகன் உள்பட திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர்.

இளம்பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை கருதி, திருமணத்துக்கு அனுமதியளித்த மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் நன்றி தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு, மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x