Last Updated : 25 May, 2020 02:06 PM

 

Published : 25 May 2020 02:06 PM
Last Updated : 25 May 2020 02:06 PM

மாட்டுத்தீவனம், கோதுமை தவிடு, புண்ணாக்கு விலை கடுமையாக உயர்வு: தவிக்கும் ஆடு, மாடுகள்; உதவி கோரும் கிராமவாசிகள்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

கரோனாவால் மனிதர்களுக்கான உணவுப்பொருட்கள் மட்டுமில்லாமல், கால்நடைகளுக்கான மாட்டுத்தீவனம், கோதுமை தவிடு, புண்ணாக்கு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் போதிய உணவின்றி விலங்குகள் தவிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் கால்நடைகளை விற்பதைத் தவிர வழியில்லை என்கின்றனர் அதனை வளர்ப்பவர்கள்.

புதுச்சேரியில் விவசாயம் முக்கியத்தொழில். விவசாயம் சார்ந்த பிராணிகள் வளர்ப்பிலும் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கிராமப்பகுதிகளான திருக்கனூர், கூனிச்சம்பட்டு உள்பட ஏராளமான கிராமங்களிலும், நகரத்தையொட்டியுள்ள சில பகுதிகளிலும் ஆடு, மாடு, கருங்கோழிகள் அதிக அளவில் வளர்க்கின்றனர்.

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலான சூழலில் தற்போது இப்பிராணிகளுக்கான உணவுப்பொருட்களின் விலையும் மனிதர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் போல் கடுமையாக உயர்ந்துள்ளது.

பிரதிநிதித்துவப் படம்

இது தொடர்பாக பிராணிகள் வளர்க்கும் கிராமவாசிகள் கூறுகையில், "ஊரடங்குக்கு முன்பாக மாட்டுத்தீவனம் ரூ.1,000-க்கு விற்றது. தற்போது அதன் விலை ரூ.1,500 ஆகியுள்ளது. கோதுமை தவிடு ஒரு மூட்டை ரூ.1,050 இல் இருந்து 1,500 ஆக உயர்ந்துள்ளது. புண்ணாக்கு கிலோ ரூ.40 இல் இருந்து ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. கோழித்தீவனம் விலையும் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

விலை அதிகரித்தபோதிலும் அதை வாங்கி பிராணிகளுக்குத் தரலாம் என்று பார்த்தால் சரியாக கிடைப்பதில்லை. ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவனம் சரியாக தர முடியாத சூழல்தான் உள்ளது. தற்போது பிராணிகளுக்கும் ஒருவேளைதான் உணவு தரும் சூழல் உருவாகிவிட்டது. மாடுகளில் கறவை பால் குறைந்துவிட்டது. அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தந்தால் இக்கரோனா காலத்தில் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

பிராணிகள் வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபடும் கிராமப் பெண்கள் கூறுகையில், "மாட்டுத் தீவனத்துக்கு ஒரே விலை நிர்ணயம் செய்து அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலமாவது பிராணிகளுக்குத் தர அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் கால்நடைகளைக் கிடைத்த விலைக்கு விற்கும் சூழல் அதிகரிக்கும். அதை உருவாகாமல் அரசு முன்கூட்டியே தடுப்பது அவசியம்" என்கின்றனர் கவலையுடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x