Published : 25 May 2020 11:31 AM
Last Updated : 25 May 2020 11:31 AM
கவிஞர் திருவைகுமரன்- திருச்சியில் வசித்தாலும் திருச்சியைத் தாண்டி தமிழகம் முழுவதுமுள்ள இலக்கியவாதிகளுக்கு நன்கு அறிமுகமானவர். தமுஎச, கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்று எல்லாவற்றிலும் பங்கெடுக்கக் கூடியவர். சமூகத்தைப் பிரதிபலிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறார். திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அண்ணாசிலை அருகே முடி திருத்தகம் வைத்திருக்கிறார். அங்கே முடிதிருத்தம் மட்டுமல்ல சமூகத் திருத்தமும் செய்கிறார்.
சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்ற திருவிளையாடல் வசனம் போலத்தான் இவரது வாழ்க்கையும். அன்றாடம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்த இவர், இந்த பொதுமுடக்க காலத்தில் அந்த வருமானத்துக்கும் வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டுவிட்டார். மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வருவாய் இன்றி நாட்களைக் கடத்துவதற்குள் பெரும்பாடு பட்டார். தற்போது சென்னை தவிர்த்து, ஏனைய இடங்களில் முடிதிருத்தகங்கள் திறக்கலாம் என்றவுடன் நேற்று முதல் கடையைத் திறந்திருக்கிறார் திருவைகுமரன்.
அவரிடம் பொதுமுடக்க காலம் மற்றும் நேற்று கடையைத் திறந்த அனுபவம் ஆகியவை குறித்துப் பேசினேன். “வீட்லயே இருந்துட்டு இப்ப கடையைத் திறக்கிறது 60 நாள் அவசரச் சிறையில் இருந்துட்டு விடுதலையாகி வந்த மாதிரிதான் இருக்கு. எனக்கான வாடிக்கையாளர்கள் எப்பவும் போல இத்தனை நாளும் காத்துகிட்டு இருந்தாங்க. தாடி, மீசையோடு வந்தவங்களத் தகதகன்னு ஆக்கி அனுப்பிச்சேன். நேத்தே இருபது பேருக்கும் மேல வந்துட்டாங்க.
பதினஞ்சு வயசுல இந்த தொழிலுக்கு வந்தேன். இப்ப எனக்கு 47 வயசாவுது. இத்தனை வருடத்துல ரெண்டு நாளைக்கு மேல என் காதுல கத்தரி சத்தம் கேட்காம இருந்ததே இல்லை. கல்யாணம் முடிஞ்சுகூட மறுநாளே கடையத் திறந்துட்டேன். ஆனா, இப்பதான் தொடர்ச்சியா 60 நாளைக்கு கத்தரி சத்தம் கேட்காம இருந்துருக்கேன்.
இந்த பொதுமுடக்க காலம், சேமிப்பு எவ்வளவு முக்கியங்கிறத எனக்கு உணர்த்திடுச்சு. தினமும் கடைக்கு வரோம், ஐநூறு, ஆயிரம் சம்பாதிக்கிறோம், அத அப்படியே செலவு செய்யுறோம்ன்னு மிதப்புல இருந்த எங்களப் போன்றவர்களுக்கு இது நல்ல படிப்பினை. யாராயிருந்தாலும் கையில பசை இருந்தாத்தான் மரியாதைங்கிறத இந்தப் பொது முடக்கம் கத்துக் கொடுத்திருக்கு. அப்பவும் நான் ஐயாயிரம் போலக் கையில வைச்சிருந்தேன். ஆனா அது எத்தன நாளைக்குப் போதும்? ஒரு மாசத்துக்குள்ளாறயே முடிஞ்சிடுச்சு. அப்புறம் என்ன செய்யுறதுன்னு கையறு நிலைமைதான்.
நான் செஞ்ச புண்ணியம், இலக்கிய நண்பர்களைத் தேடிக்கிட்டதுதான். அதுல உள்ளவங்க சில பேர் என் நிலைமைய அவங்களா உணர்ந்துகிட்டு தங்களால முடிஞ்சத அனுப்பி உதவுனாங்க. அதனால மிச்சமுள்ள நாளெல்லாம் பசியில்லா நாட்களாகக் கடத்த முடிஞ்சது.
கடை திறக்காம, வீட்ல இருந்தது ஒருபக்கம் கஷ்டம்னா இன்னொரு பக்கம் குடும்பத்துல உள்ளவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். ஏன்னா, குழந்தைங்க தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு கெளம்பிடுவேன், ராத்திரி பத்து மணிக்கு மேல அவங்க தூங்கினதும்தான் வீட்டுக்கு போவேன். அதனால குழந்தைங்களோட பொழுத கழிக்கிறதுங்கிறது இதுவரைக்கும் இல்லவே இல்லை. இப்ப அறுபது நாளும் அவங்களோடயே இருந்தது அவ்வளவு மகிழ்ச்சி. அதேபோலத்தான் மனைவிக்கும். இதுவரைக்கும் அவங்ககூட இருந்த நேரமும் ரொம்பக் கம்மி, அதேபோல சேர்ந்து வெளியில போறதும் கிடையாது. எந்த விஷேசமாயிருந்தாலும் அவங்க தனியாதான் போயிட்டு வருவாங்க. இப்ப வீட்லயே இருந்தது அவங்களுக்கும் மகிழ்ச்சிதான்.
அரசாங்கம் எங்களக் கண்டுக்கவே இல்லைன்னுதான் சொல்லணும். எல்லாத் தொழில்களுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும்கூட எங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்படவேயில்லை. நானே ஏழு முறை திருச்சி ஆட்சியரைப் பார்த்து மனு கொடுத்திருக்கேன். கடைசியா, போன திங்கட்கிழமை ஆயிரம் பேருக்கும் மேல ஒண்ணா சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்குப் போனபிறகுதான் அது அரசாங்கத்து கவனத்துக்குப் போயி கடையத் திறக்க அனுமதிச்சிருக்காங்க. அதேபோல, முடிதிருத்துவோருக்கு ரெண்டாயிரம் ரூபா நிவாரணம் தருவோம்னு அரசாங்கத்துல சொல்லியிருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் ஒருத்தர்க்கு கூட கிடைக்கல. எல்லாருமே கடனை வாங்கித்தான் காலத்தை ஓட்டியிருக்காங்க.
இந்த கரோனா இன்னும் கூடுதலா சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கணும்னு உணர்த்தியிருக்கு. பொதுவாகவே கிருமிநாசினி உபயோகிப்பது, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிளேடு என்று கவனமா இருப்போம். இப்ப இன்னும் அதிக கவனத்தோட இருப்போம்” என்று சொன்னார் திருவைகுமரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT