Published : 24 May 2020 07:52 PM
Last Updated : 24 May 2020 07:52 PM
மது, சாராயத்துக்கான கரோனா வரி புதுச்சேரி, காரைக்காலில் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கள்ளுக்கு கரோனா வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மதுவிலை கடுமையாக உயர்ந்துள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மதுக்கடைகளைத் திறக்க அனுமதி தந்துள்ளார். அதையடுத்து மது விலை வரி உயர்வு தொடர்பாக அரசாணை இன்று வெளியானது. அதில் புதுச்சேரி, காரைக்காலில் மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கரோனாவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கு கரோனா வரி இல்லை.
இதைத் தொடர்ந்து மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அக்கடைகளின் உரிமையாளர்களுடன் இன்று மாலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு புதுச்சேரி கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாளை முதல் மதுபானக் கடைகள் புதுச்சேரி, காரைக்காலில் திறக்கப்படுகின்றன. மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 10 முதல் இரவு 7 வரை திறந்திருக்கும். மதுக்கடைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தமிழகத்திலிருந்து கரோனா தொற்றாளர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். அதன்படி கரோனா வரி விதிக்கப்பட்டு தமிழகத்துக்கு இணையான மது விலை இருக்கும். கரோனா வரி அமல் 3 மாதங்களுக்கு மதுபானங்களுக்கு இருக்கும்'' என்று குறிப்பிட்டார்.
மது வாங்குவதில் கட்டுப்பாடு
கலால்துறை விதியின்படி நபர் ஒருவர் 4 அரை லிட்டர் வரை மதுபானங்களை வாங்கிச்செல்லலாம். புதுச்சேரியில் 920 வகையான மது வகைகள் உள்ளன. 154 வகையான மது வகைகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் விற்பனை செய்யப்படாத மது வகைகளுக்கு விற்பனை விலையில் இருந்து 25%கூடுதல் வரி விதித்து விற்பனை செய்யப்படும். ஊரடங்கின்போது போது கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த கடைகள் மீது கலால்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படாத கடைகள் மீண்டும் திறக்கப்படும். இதுவரை 20 கடைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது
புதுச்சேரியில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT