Published : 24 May 2020 05:30 PM
Last Updated : 24 May 2020 05:30 PM
மத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் புதுச்சேரி மாநிலம் கண்டிப்பாக எதிர்க்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 24) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கரோனா தொற்றால் 2020-21 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால், ரிசர்வ் வங்கி தலைவர் அளித்த பேட்டியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் செல்லும் என்றும் இவ்வளவு அறிவிப்புகள் அறிவித்தால் கூட அது பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படாது என்றும் கூறியுள்ளார்.
இருவரின் முரண்பாடான கருத்து மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டும். இருவரும் ஒரே கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும். குறிப்பாக, பொருளாதார வல்லுநர்கள் கூறுவதைத் தெளிவுபடக் கேட்டு அறிவிப்புகளை மாற்ற வேண்டும்.
யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற அறவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். விவசாயிகளுக்கு சலுகைகள், ஏழை மக்களுக்கு மின்சாரச் சலுகைகள் கொடுப்பதை மாநில அரசுகள் பணமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக புதுச்சேரி, தமிழகம், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பதைக் கருத்தில் கொண்டு நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு சலுகைள் வழங்கப்பட்டு வருகின்றன.
மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் இதுபோன்ற இலவச மின்சாரத் திட்டத்தை நிறைவேற்றுவது ஏமாற்றமாகவும், சவாலாகவும் இருக்கும். தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றார்போல் மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ளும். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதி, தற்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டும்.
மின்துறையை தனியார் மயமாக்குவதால் மாநிலத்துக்கு எந்தவித பலனும் இல்லை. மின்சாரம் மத்திய, மாநிலப் பட்டியலில் இணைந்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது. நிறைவேற்றினால் புதுச்சேரி மாநிலம் கண்டிப்பாக எதிர்க்கும் என்று கூறியிருந்தேன். ஆனாலும் இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
புதுச்சேரி மாநிலத்தின் கொள்கை மின்சாரத்தை, மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதுதான். கரோனா சமயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது.
மாநிலங்களுக்கு கடுமையான விதிகளைப் போட்டு காலதாமதம் ஏற்படுத்தாமல் கரோனாவை எதிர்த்துப் போராடும் சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் மாநில மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தில் மதுக்கடைகள் மூலம் குறிப்பிட்ட வருவாய் வருவதன் மூலமாகத்தான் பட்ஜெட்டையும், மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடிகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட மதுபானங்களின் விலை குறைவாக உள்ளது.
மதுக்கடைகள் திறப்பது சம்பந்தமான கோப்பை நாங்கள் தயாரித்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினோம். இதில் அவருடைய கருத்து மாறுபாடாக இருந்தது. ஆகவே இரண்டு முறை எங்கள் அமைச்சரவையில் பேசி மதுக்கடைகளைத் திறக்க முடிவு எடுத்தோம். தமிழகம், புதுச்சேரிக்கு ஏற்றார்போல் உள்ள மதுக்களுக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினோம். அதற்கான ஒப்புதல் வந்துள்ளது.
மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மதுக்கடைகள் திறப்பதற்கான கோப்பை இன்று அனுப்புகிறோம். அதற்கும் ஒப்புதல் வரும். இது அரசிதழில் வெளியிடப்படும். இதன் மூலம் மதுக்கடைகள் திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். கடந்த ஒருவாரமாக மதுக்கடைகள் திறக்காததால் மாநிலத்துக்கு வருகின்ற வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கான ஒப்புதலை ஆளுநர் இப்போது அளித்துள்ளார். அடுத்த வாரம் முதல் அரிசி வழங்குவோம்.
தமிழக அரசால் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் தமிழக அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களை நீமன்றத்தில் கூறி வெற்றி பெற்றுள்ளார். அதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுள்ளனர். அவர் கூட்டத்தில் பேசும்போது ஒரு சமுதாயத்தை தவறாகப் பேசியதாகக் கூறியுள்ளனர். தமிழக அரசானது அதனைத் தீர விசாரித்து அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்குப் போடுவது, காலை நேரத்தில் சென்று கைது செய்வது அதிகாரத் துஷ்பிரயோகமாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. நிச்சயம் அவர் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து வெளியே வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT