Published : 24 May 2020 05:14 PM
Last Updated : 24 May 2020 05:14 PM
புதுச்சேரியில் குப்பைகளில் பேப்பர் சேகரிக்கும் பெண் உட்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமூகத் தொற்றாக மாறியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே 36 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 20 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருவர் கண்ணூர் மருத்துவமனையிலும், மற்றொருவர் சென்னை மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர்.
மாஹே பிராந்தியத்தில் 2 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது பெரியகாலாப்பட்டு, மண்ணாடிப்பட்டை சேர்ந்த 2 இளைஞர்கள், ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ஒருவர், குருமாம்பேட் பகுதியில் குப்பைகளில் பிளாஸ்டிக், பேப்பரைச் சேகரிக்கும் பெண் மற்றும் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நபர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று வரை 29 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (புதுச்சேரியைச் சேர்ந்தோர்) 41 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நபருக்கு இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் வந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புதுச்சேரி அரசு தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 12 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தற்போது ஜிப்மரில் இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் தமிழக நோயாளிகள் உட்பட கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று(மே 24) செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘வெளிநாடுகள் மற்றும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் இருந்து வருபவர்களால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தாங்கள் இறங்கும் விமான நிலையங்களில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் 14 நாட்கள் அந்த மாநிலத்தில் தனித்து தங்கியிருப்பதாக தெரிவித்துவிட்டுச் செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு தங்காமல் ஓரிரு தினங்களிலேயே புதுச்சேரிக்கு வந்து விடுகின்றனர். எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இறுதியில் புதுச்சேரிக்கு வருபவர்கள் என்றால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரின் இ பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் முன்பைப்போல் கடுமை ஆக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலமாக அறிவிப்பதற்கான முடிவை மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பேரிடர் மேலாண்மை தலைவரே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் தலைவராக உள்ள முதல்வர்தான் சிவப்பு மண்டலமாக அறிவிப்பது குறித்து முடிவு எடுப்பார்’’ என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது,‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே 36 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தற்போது 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை 41 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். காரைக்கால், ஏனாமில் எந்த நபருக்கும் பாதிப்பு இல்லை.
தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 5 பேரில் ஒருவர் ஏற்கெனவே பெரிய காலாபட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் மகன், மற்றொருவர் மண்ணாடிப்பட்டைச் சேர்ந்தவர். அவர் சென்னையில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது.
மேலும் குருமாம்பேட் பகுதியில் குப்பைகளில் பிளாஸ்டிக், பேப்பரைச் சேகரிக்கும் பெண் ஒருவர் காய்ச்சலுடன் வந்தார். ஏற்கனவே அதே பகுதியில் இருவர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ததில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆம் நபர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்தவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
அவருக்கு டயாலிசிஸ், கரோனா இரண்டும் இருப்பதால் அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்ய உள்ளோம். 5 வது நபர் மூகாம்பிகை நகர் 4-வது தெருவில் வசிப்பவர். ஏற்கெனவே அப்பகுதியில் 5-வது தெருவில் வசிப்பவருக்கு கரேனா தொற்று உள்ளது. எனவே சமூக தொற்றாக மாறியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என்று மோகன்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT