Published : 24 May 2020 02:25 PM
Last Updated : 24 May 2020 02:25 PM
மதுரை குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 41.98 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இந்த உறைகிணறுகளில் நீர்மட்டம் உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு வைகை அணையில் உறைகிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 6 மணிமுதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தொடர்ந்து 3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்க உத்தரவிடபட்டுள்ளது. முதல் நாள் வினாடிக்கு 1000 கனஅடி வீதமும், இரண்டாவது நாள் வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும், 3வது நாள் வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் நீர்மட்டம் பெருகும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் அதேசமயம் 3 நாட்கள் தண்ணீர் திறப்பதால் நீர்வரத்து இல்லாத வைகை அணையின் நீர்மட்டம் 5 அடி வரையில் சரியும் நிலையும் உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT