Published : 24 May 2020 02:06 PM
Last Updated : 24 May 2020 02:06 PM
கரோனா ஊரடங்கு 4-வது கட்டத்தில் 60 நாட்களைக் கடந்த நிலையில் அமைச்சரவை அனுப்பிய கோப்பின் அடிப்படையில் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு இலவச அரிசி, பருப்பு தர கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். ஆனால், நிதியில்லாததால் சிக்கல் நிலவுகிறது. அரிசி எப்போது மக்களுக்குக் கிடைக்கும் என்பதில் குழப்பமே நிலவுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 3.36 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 1.80 லட்சம் ரேஷன் கார்டுகள் ஏழை மக்களுக்கான சிவப்பு ரேஷன் கார்டுகளாகும். மீதமுள்ள 1.56 லட்சம் கார்டுகள் மஞ்சள் ரேஷன் கார்டுகளாகும்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களுக்கு அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 9,425 மெட்ரிக் டன் அரிசி, 525 மெட்ரிக் டன் பருப்பு ஆகியவை வந்தடைந்தன. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காமல் மூடிக் கிடப்பதால் பல்வேறு துறையினர் மூலம் பஸ்களிலும், லாரிகளிலும் மூட்டைகள் எடுத்துச் சென்று வீடு வீடாகத் தர முடிவு எடுக்கப்பட்டது. அரிசியை பேக்கிங் செய்தனர்.
அரிசி விநியோகத்தை சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே தர 20 நாட்கள் எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு பருப்பு தனியாக தந்தனர். அதேபோல் ரேஷன் மூலம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடக்கும் என்று முதல்வர் அறிவித்து பல வாரமாகியும் அதுவும் செயல்படுத்தவில்லை. ஊரடங்கு அமலாகி 60 நாட்களாகியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த அரிசி, பருப்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தராத அவலமே புதுச்சேரியில் நிலவுகிறது.
இச்சூழலில் இந்திய உணவுக் காப்பீட்டுக் கழகத்திலிருந்து மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கும் இலவச அரிசி தர அமைச்சரவை முடிவு செய்து அனுப்பிய கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்துள்ளார். அக்கோப்பில் ரூ. 5.28 கோடிக்கு இந்திய உணவுக் காப்பீட்டுக் கழகத்திலிருந்து அரிசி கொள்முதல் செய்து மஞ்சள் நிற அட்டைக்கு விநியோகிக்கலாம் என்ற கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
ரேஷன் அட்டை குழப்பம்
புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "புதுச்சேரியில் மஞ்சள் அட்டையிலும் ஏராளமான ஏழைகள் உள்ளனர். சரியான முறையில் ரேஷன் கார்டு தராததால் அந்த அட்டை வைத்துள்ள பலரும் பாதிப்பில் உள்ளனர்" என்றார்.
பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறுகையில், "சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய அரிசி தற்போதுதான் அவர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மஞ்சள் அட்டை குடும்பங்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். அரசின் தவறால் இவர்கள் மஞ்சள் அட்டையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பிரதமர் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உதவிகள் இந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை" என்று குறிப்பிடுகிறார்.
தவிக்கும் பழங்குடிகள்
பழங்குடியின மக்களில் பலரும் மஞ்சள் அட்டை வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு அரிசி, பருப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர்கள் கூறுகையில், "நாங்கள் பழங்குடியின மக்கள். பெரிய படிப்பில்லை. நாங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பித்தபோது எங்களுக்கு ஏழை மக்களுக்கான சிவப்பு நிற ரேஷன் கார்டு தரவில்லை. நடுத்தர மக்களுக்கான மஞ்சள் நிற ரேஷன் கார்டுதான் தந்தார்கள். இப்போது சிவப்பு நிற ரேஷன் கார்டுக்குதான் புதுச்சேரியில் இலவச அரிசி, பருப்பு தந்தார்கள். மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு எதுவும் தரவில்லை. அதேபோல் ரூ. 2 ஆயிரம் நிவாரணமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கொஞ்சமாவது எங்கள் மீது அரசு கருணை காட்டுங்கள்" என்கிறார்கள் கண்ணீருடன்.
அரிசி எப்போது கிடைக்கும் என்று அமைச்சர்கள் தரப்பில் விசாரித்தால், "புதுச்சேரியில் இன்னும் பட்ஜெட் போடவில்லை. பட்ஜெட் போடாததால் பணம் எதுவும் இல்லை. மஞ்சள் கார்டுகளுக்கு அரிசி வழங்க ரூ.4 கோடி பற்றாக்குறையாக உள்ளது. அரிசிக்கான தலைப்பில் பணம் இல்லை. பட்ஜெட் போட்டால் அந்த தலைப்பில் பணம் ஒதுக்கி, அரிசிக்கான பணத்தை வழங்கி அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம்" என்று குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT