Published : 24 May 2020 12:27 PM
Last Updated : 24 May 2020 12:27 PM
புதுச்சேரி, காரைக்காலில் கரோனா வரியுடன் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். தமிழக விலையை ஒப்பிட்டு அதை விட விலை கூடுதலாக இருக்கும் வகையில் அனுமதி தரப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாணை வெளியான பிறகே முழு விவரம் தெரியவரும். அதே நேரத்தில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி தரப்படவில்லை.
கரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் நான்காம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி புதுச்சேரியிலும் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக கடந்த 18-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதன் பின்னர் 20-ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பினர். ஆனால், கரோனா வரி விதிக்கப்படாததால் அதை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பினார்.
அன்று முதல் முதல்வர், அமைச்சர்கள் பலமுறை கூடி விவாதித்து கோப்புகளை அனுப்புவதும், ஆளுநர் தெரிவித்த விஷயங்களைச் சேர்ப்பதுமாக நீண்ட இழுபறி நீடித்தது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி கூறியபடியே பல திருத்தங்களுடன் மீண்டும் கோப்பு சென்றது. இதனால் மதுக்கடைகள் திறக்க ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி காரைக்காலில் கரோனா வரியுடன் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.
அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, வழக்கமாக புதுச்சேரியில் மதுவிலை குறைவாக இருக்கும். ஆனால் இது கரோனா காலம் என்பதால் யாரும் புதுச்சேரி வருவதைத் தவிர்க்க, தமிழக மது விலையை ஒப்பிட்டு அதை விடக் கூடுதலாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மது விலை இருக்கும் வகையில் நிர்ணயித்தே ஒப்புதல் கிடைத்துள்ளது. ஏனெனில் தமிழகம் பகுதியைச் சேர்ந்தோர் மதுவுக்காக இங்கு வருவதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இல்லாத மதுக்களுக்கும் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் கடைகள் இயங்கும் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் கேரள மற்றும் ஆந்திர மதுபானங்களின் விலை அடிப்படையைப் பார்த்து அதன்பிறகே புதுச்சேரி பிராந்தியங்களான மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மது விற்பனைக்கு ஆளுநர் அனுமதி தருவார் என்றும் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் மது விலை தொடர்பாகவும் அதற்கான வரி தொடர்பாகவும் இன்று அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்தே புதுச்சேரி, காரைக்காலில் மது விலை சரியாக தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT