Published : 24 May 2020 08:23 AM
Last Updated : 24 May 2020 08:23 AM
ச.கார்த்திகேயன்
தெருக்கள், சந்தைகள், பக்கவாட்டுசுவர்கள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் அழியாது. இவ்வாறு செய்வது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு தொடர்கிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, தடுப்பு நடவடிக்கையாக சாலைகள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
“மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்களில் வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்க தேவையில்லை. உள்புறங்களில் அடிக்கடி தொடும்இடங்களில் கிருமிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று ‘இந்து தமிழ்' சார்பில் சுகாதாரத் துறை உயரதிகாரியின் கவனத்துக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதியே கொண்டு செல்லப்பட்டது.
‘‘கிருமிநாசினி தெளிப்பால் கரோனா பரவலைத் தடுக்க முடியாது. வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பால் கரோனா வைரஸ் அழியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அரசுத் துறைகள் கோரும் நிதியை விடுவிக்கலாம்’’ என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உயரதிகாரிகளிடம் கடந்த ஏப்ரல் 5-ம் தேதியே தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், உள்ளாட்சி அமைப்புகளால் 20,510 கைத்தெளிப்பான்கள், 3,718 வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், 8,191 ராட்சத தெளிப்பான்கள், 243 ஜெட்ராடிங் இயந்திரங்கள் உட்பட 420 வாகனங்கள் மூலம் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
சென்னையில் சீல் வைக்கப்பட்ட தெருக்கள், கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள், கோயம்பேடு சந்தை ஆகிய எல்லா இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதிகளில்தான் தொற்று அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையால் 2,600 பேருக்கு மேல் கரோனா பரவியுள்ளது. இதிலிருந்தே வெளிப்புறங்களில் கிருமிநாசனி தெளிப்புக்கும், கரோனா பரவலுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
இந்நிலையில், ‘‘தெருக்கள், சந்தைகள், பக்கவாட்டு சுவர்கள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் அழியாது. குறிப்பாக அழுக்கான பகுதிகள், குப்பைகள் மீது தெளிப்பதால் கிருமிநாசினிகள் அதன் திறனை இழக்கின்றன. வெளிப்புறங்களில் தெளிப்பதால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும்’’ என்று உலகசுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பின்னரும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு தொடர்கிறது. கோவையில் சொந்த ஊர்களுக்கு செல்ல வரிசையில் காத்திருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவன அறிவிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வரும் காலங்களில் கிருமிநாசினி தெளிப்பது நிறுத் தப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT