Published : 23 May 2020 05:02 PM
Last Updated : 23 May 2020 05:02 PM

தேசத்தையும், மதத்தையும் கடந்த மனிதநேயம்: இதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது வங்கதேச சிறுவனுக்கு கோவையில் அறுவை சிகிச்சை

சிறுவன் ஆரிஃப்

கோவை

இதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது வங்கதேச சிறுவனுக்கு கோவையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய உதவிய தன்னார்வலர்களுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் உள்ள சட்டோக்ராம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகமது நூருல் அப்சல்-மோஹசனா பேகம் தம்பதியின் மகன் முகமது அசன் ஆரிஃப் (9). இச்சிறுவனின் இதயத்தில் ஓட்டை இருந்தது நான்கு வயதில் தெரியவந்தது. வறுமையில் வாடிய பெற்றோர், தங்களது மகனின் உடல்நலப் பாதிப்பை சீரமைக்க முடியாத நிலையில் இருந்தனர். பத்து மீட்டர் கூட தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு சிறுவன் ஆரிஃப் அவதிப்பட்டு வந்தான்.

இச்சிறுவனின் மாமாவான அப்துல் ரஹீம், ஓமன் நாட்டில் தன்னுடன் பணிபுரிந்து வந்த வேதாரண்யம் ராஜசேகரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த ராஜசேகர், வங்கதேசத்திலிருந்து சிறுவன் ஆரிஃப் மற்றும் அவனது தாய், மாமாவை வரவழைத்து, வேதாரண்யத்தில் மருத்துவர் சுப்பிரமணியனிடம் சிறுவனைக் காண்பித்துள்ளார்.

கோவை போன்ற பெரிய நகரில் உள்ள மருத்துவமனையில் சிறுவனை சேர்த்து, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோவை கே.ஜி.மருத்துவமனைக்கு ஆரிஃப்பை அழைத்து வந்து, பரிசோதித்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் இதய பாதிப்பை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், கரோனா ஊரடங்கால் சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது.

தொழிலதிபர் சுல்தானுல் ஆரிஃப்பின் என்பவர் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டார். வேதாரண்யத்தில் சுமார் 45 நாட்கள் ராஜசேகர் வீட்டில் ஆரிஃப்பும், தாய், மாமாவும் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன் கோவையில் ஆரிஃப்புக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஆரிஃப் நலமாக இருக்கிறான்.

"வங்கதேசத்திலிருந்து எங்களை அழைத்து வந்து, உணவு, தங்குமிடம் அளித்து, ஆரிஃப்புக்கு அறுவை சிகிச்சை செய்யவும் உதவிய ராஜசேகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனிதநேயம் என்பது தேசத்தை, மதங்களையெல்லாம் கடந்தது என்பதை நிரூபித்துள்ளனர். எங்கள் வாழ்நாள் முழுவதும் இதை மறக்க மாட்டோம்" என்றார் ஆரிஃப்பின் தாயார் மோஹசனா பேகம்.

இதுகுறித்து சகோதரத்துவப் பேரவை தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் கூறும்போது, "சிறுவனின் இதயத்தில் ஏற்பட்ட ஓட்டையை சரி செய்ய மதங்களைக் கடந்து பல்வேறு தரப்பினரும் உதவினர். சிறுவனையும், அவனது குடும்பத்தாரையும் 45 நாட்கள் தங்கவைத்து, அறுவை சிகிச்சை செய்ய தன்னார்வலர் ராஜசேகர் உதவினார்.

சுல்தானுல் ஆரிஃப்பின் அறுவை சிகிச்சைக்கான செலவை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டார். மற்றொரு தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவி, மனிதநேயத்தில் தலைசிறந்தவர்கள் இந்தியர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x