Published : 23 May 2020 12:47 PM
Last Updated : 23 May 2020 12:47 PM
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை, ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வழியாக நடைபெறும் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை (மே 24), ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது; சட்ட விரோத, ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்.24-ம் தேதி, தலித் சமுதாயத்தினர் குறித்து அவமதிக்கும் விதமாக பேசியதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி இன்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், திமுகவினர் மீதான கைது நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT