Published : 23 May 2020 12:46 PM
Last Updated : 23 May 2020 12:46 PM
கரோனா பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில்களில் விசைத்தறி நெசவும் ஒன்று. தற்போது பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் சூழலிலும், ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து பாவு நூல் வரவில்லை என்பதால், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மீண்டுவர முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், இயங்காது நிறுத்தப்பட்டிருக்கும் விசைத்தறிகளின் புகைப்படங்களுடன், ‘ஊரடங்கும் முடியாமல் நூலும் வருமா? நூலும் அது வாராமல் தறிதான் ஓடுமா? நூல் வந்த பின்னாலும், பாவு வந்த பின்னாலும் நம் கையில் கூலி அதுவும் வருமா?’ என்றொரு பாடலைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் விசைத்தறி தொழிலாளர்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவுமாறு கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் விசைத் தறிகள் இயங்குகின்றன. அதில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு, குறு விசைத் தறியாளர்களே. பெரிய ஜவுளி நிறுவனங்களில் பாவு நூல் எடுத்து வந்து அதைத் தறியில் நெய்து காடாத் துணியாகக் கொடுத்தால், ஒவ்வொரு மீட்டருக்கும் குறிப்பிட்ட தொகை, கூலியாக இவர்களுக்குக் கிடைக்கும். இந்தக் கூலியிலிருந்துதான் விசைத் தறியாளர்கள் தங்கள் தறி குடோனில் வேலை செய்யும் கூலிக்காரர்களுக்கு வாரக்கூலி கொடுப்பார்கள். தங்களுக்கான கூலி மற்றும் மின்சாரம், தறி உதிரிப் பாகங்களுக்கான செலவுகளையும் இதிலிருந்துதான் சமாளிப்பார்கள்.
ஏற்கெனவே உற்பத்தி செய்த காடாத் துணி தேக்கமடைந்து கிடப்பதாலும், உற்பத்திச் செலவுகள் காரணமாகத் தொழிலில் ஏற்பட்ட முடக்கத்தாலும் இந்தத் தொழிலாளர்கள் நசிந்து கிடந்தனர். தற்போது கரோனா வைரஸ் பரவல், பொது முடக்கம் ஆகியவற்றின் காரணமாக இவர்களின் துயரம் இன்னும் அதிகரித்துவிட்டது.
இந்தச் சூழலில்தான், இப்படியொரு பாடலை இயற்றி வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர் கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்கள். இந்தப் பாடலில் விசைத்தறியாளர்கள் படும் அவஸ்தைகள் கண்ணீர் வரிகளாக விரிகின்றன. அதற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனுக்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர்.
இந்தச் சங்கத்தின் செயலாளர் பி.குமாரசாமி, தலைவர் சி.பழனிசாமி கையெழுத்திட்டு அனுப்பியிருக்கும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
‘அரசு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு ஒரு விசைத்தறிக் கூடத்தைக்கூட இயக்காமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். இதனால் எந்த விதமான வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறோம். மே 18-ம் தேதி முதல் அரசு உத்தரவில் விசைத்தறிகளை இயக்குவதற்கு பொது முடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்துள்ளீர்கள். எனினும், அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. உடனடியாகத் தொழில் தொடங்குவதற்கு நாங்கள் தொழிலதிபர்கள் அல்ல. ஜவுளி உற்பத்தியாளர்கள் எங்களுக்குப் பாவு நூல் அனுப்பினால் மட்டும்தான் நாங்கள் அனைவரும் தொழில் தொடங்க முடியும்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் கரோனா பாதிப்பினால் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர். அதனால் அவர்கள் இதுவரை எங்களுக்குப் பாவு நூல் வழங்கவில்லை. வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையில் சகஜ நிலை ஏற்பட்ட பின்னர்தான் ஜவுளித் தொழிலைச் சீராக இயக்க முடியும். ஆகவே, தற்போது நாங்கள் ஜவுளி உற்பத்தி செய்தாலும், வட மாநிலங்களில் ஜவுளி வாங்குவதற்கு வியாபாரத்தில் சகஜ நிலை ஏற்பட்ட பின்னர்தான் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிலைத் தொடங்க முன்வருவார்கள்.
கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. பல்வேறு துறைகளில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், எங்களைப் போல் கூலிக்கு நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கும் அவர்களுடைய வறுமைக்கு ஏற்ப அரசு நிவாரணம் வழங்கியிருக்கிறது. அவர்களைப் போலவே எங்களுக்கும் நிவாரணம் வழங்கி எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தவிர, எங்கள் தொழிலில் தற்போது உள்ள நெருக்கடியை உத்தேசித்து, ஆந்திர அரசைப் போல கரோனா காலத்தில் உள்ள மூன்று மாத மின்சாரக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.’
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT