Published : 23 May 2020 12:01 PM
Last Updated : 23 May 2020 12:01 PM

பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு உயிருடன் புதருக்குள் வீச்சு: அதிகாலை நேரத்தில் திருப்பூரில் நிகழ்ந்த கொடுமை

உயிருடன் புதருக்குள் வீசப்பட்ட குழந்தை

திருப்பூர்

பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசுவை இன்று அதிகாலை சாலை அருகே இருந்த புதருக்குள் பொதுமக்கள் கண்டெடுத்த சம்பவம், திருப்பூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை பெரியார் காலனி தனியார் மருத்துவமனை அருகில், பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் வழியில் பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது. இன்று (மே 23) அதிகாலை அப்பகுதி வழியாக சென்ற பெண்கள், அங்கிருந்த புதருக்குள் இருந்து குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டு எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது பெண் குழந்தை ஒன்று துண்டால் சுற்றிய நிலையில் போடப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் குழந்தையை எடுத்தனர்.

பெண் சிசு உயிருடன் புதருக்குள் வீசப்பட்டது தொடர்பாக அப்பகுதியில் தகவல் பரவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ச.நந்தகோபால், பெண் குழந்தை உயிருடன் வீசப்பட்டது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் மற்றும் சைல்டுலைன் அமைப்புக்கும் தகவல் அளித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ச.நந்தகோபால் கூறும்போது, "மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதி தான். அதிகாலை நேரத்தில் ஆட்கள் இல்லாத போது யாராவது இந்த காரியத்தை செய்திருக்கலாம். நாய்கள் அதிகளவில் சுற்றித்திரியும் இப்பகுதியில், புதருக்குள் உயிருடன் வீசப்பட்ட குழந்தைக்கு எதுவும் நேராமல் காப்பாற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யமே" என்றார்.

திருப்பூர் அரசு பெண் மருத்துவர் ஒருவர் கூறும்போது, "மிகவும் அழகிய பெண் குழந்தையை, இப்படி செய்ய எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. பெண் குழந்தை என்பதால் அதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டிருந்தால், இப்படி அந்த தாய் செய்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x