Published : 22 May 2020 07:08 PM
Last Updated : 22 May 2020 07:08 PM
குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மண்வெட்டியால் வாய்க்காலைச் சீர் செய்தது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வாளமர்கோட்டை கிராமம், கல்லணை கால்வாய் கோட்டத்திற்குட்பட்ட வடசேரி வாய்க்கால் மதகுகள் மற்றும் சறுக்கை புனரமைக்கும் பணி குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இன்று (மே 22) பார்வையிட்டார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டார். அங்கு பணியாற்றிய பணியாளர்களிடமிருந்து மண்வெட்டியை வாங்கி சிறிது துாரம் வாய்க்காலைச் சீர்படுத்தும் பணியினைச் செய்தார். பின்னர் பணியாளர்களிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.
பின்னர், தஞ்சாவூர் வட்டம், காட்டூர் கிராமத்தில் குலமங்கலம் மெயின் வாய்க்கால், 0 கி.மீ. முதல் 10.22 கி.மீ. வரை, குலமங்கலம் மூன்றாம் எண் வாய்க்கால் 0 கி.மீ. முதல் 3 கி.மீ. வரை, கல்யாண ஓடை பிரிவு நான்காம் எண் வாய்க்கால் 0 கி.மீ. முதல் 2.7 கி.மீ. வரை தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடைபெறுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காட்டூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தென்னமநாடு ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் கல்யாண ஓடை பிரதான கால்வாய், 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதையும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தென்னமநாடு அம்மணிகுளம், வண்ணான்குளம் தூர்வாரப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஜஸ்டின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT