Last Updated : 22 May, 2020 04:36 PM

 

Published : 22 May 2020 04:36 PM
Last Updated : 22 May 2020 04:36 PM

குமரியில் இருந்து 1200 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு: ரயில் நிலையம் செல்ல ரூ.40 இல்லாமல் தவித்த தொழிலாளர்கள்- உதவிய அதிகாரிகள்

நாகர்கோவில்

கன்னியாகுமரியிலிருந்து ராஜஸ்தானுக்கு 575 பேரும், நாகர்கோவிலிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு 634 தொழிலாளர்களும் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி தவித்து வந்தனர். இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களைப் சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

குமரி மாவட்டம் முழுவதும் வடமாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இவர்களில் சொந்த ஊர் செல்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

மேலும், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்புமாறு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த 17ஆம் தேதி பீகாருக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. அதில் 957 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் மேலும் இரண்டு சிறப்பு ரெயில்கள் மூலம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரியிலிருந்து ராஜஸ்தான், நாகர்கோவிலிலிருந்து ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நேற்று நடைபெற்றது.

ராஜஸ்தான் செல்பவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தோடு அங்கு வந்தனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும் 575 பேரும் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

இதே போல ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்லு. 634 தொழிலாளர்களுக்கு நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளியில் பரிசோதனை நடந்தது. இதன் பின்னர் இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரயிலில் புறப்பட்டு சென்றார்.

தொழிலாளர்களிடம் நாகர்கோவில் ரயில் நிலையம் செல்வதற்கு பஸ் கட்டணமாக ரூ.25 வசூல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையம் செல்வதற்கு ரூ 40 பஸ் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இதில் சில தொழிலாளர்கள் பஸ் கட்டணத்தை செலுத்துவதற்கு பணம் இல்லாமல் தவித்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த சில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவினார். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடமாநிலத் தொழிலாளர்கள் சாப்பாடு மற்றும் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x