Published : 22 May 2020 03:08 PM
Last Updated : 22 May 2020 03:08 PM
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 4 ஆண்டுகளாக ஒரு சாதனையையும் செய்யவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டு இன்று மாலையுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. 4 ஆண்டுகளாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை.
மக்களுக்கு இலவச அரிசி தரும் திட்டத்தைக்கூட முடக்கிவிட்டார். நான்கு ஆண்டுகளாக பொய்யையே கூறி வந்துள்ளார். முதல்வர், அமைச்சர்கள் இல்லாமல் தான் மட்டுமே மத்திய அமைச்சர்கள் யாரையேனும் சந்தித்து ஒரு பைசா பணம் அல்லது ஒரு திட்டம் கொண்டு வந்தேன் என்று கூற முடியுமா? புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து தொல்லைதான் கொடுத்து வருகிறார்.
பிற ஆளுநர்கள், அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் உள்ள நன்மைகளைப் பார்த்து அனுமதி தருவார்கள். ஆனால் கிரண்பேடியிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. அனைத்துத் திட்டங்களையும் தடுத்ததையும், கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியதையும் தான் சாதனையாகக் கூற முடியும். மற்றபடி அவருடைய சேவையில் பூஜ்ஜியம்தான்.
மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பைசா கூட வாங்கி வரவில்லை. புதுச்சேரி மக்களின் பணத்தில் செலவு மட்டுமே செய்துள்ளார். தற்போது கரோனா பாதிப்பினால் குடியரசுத் தலைவர் ரூ.45 கோடி செலவு குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதுபோல் ஆளுநர்களும் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏதேனும் ஒரு ரூபாய் செலவையாவது குறைத்திருப்பாரா? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கர்வம் இல்லை. ஏனென்றால் முதல்வர் பதவிக்கு முன்பே அதைவிட பெரிய பதவிகளை வகித்துவிட்டார். அதுபோல் அமைச்சர்கள் யாரும் முதல் முறை பதவிக்கு வரவில்லை. ஆனால் கிரண்பேடி தற்போதுதான் முதல் முறையாக ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார்.
மதுக்கடைகளைத் திறக்க அமைச்சரவை எடுத்து அனுப்பிய முடிவுக்கு அனுமதி தர மறுக்கின்றார். அதற்கு புதுச்சேரியில் எதுவும் நடக்கக் கூடாது, புதுச்சேரிக்கு வருமானம் வர கூடாது என்ற எண்ணம்தான். கரோனா பாதிப்பு காலத்துக்கு மாநில அரசு ரூ.2 ஆயிரமும், மத்திய அரசு அரிசியும், பருப்பும்தான் வழங்கியது. இது போதாது. மக்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
அதற்கு வருமானம் வேண்டும். மதுக்கடைகளைத் திறக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும். வருமானம் வந்தால்தான் ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய முடியும். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சமமாக மதுபான வரி விதிக்கும்படி வலியுறுத்துகின்றார்.
தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக மதுபான வரி வசூலிக்கவில்லை. ஆந்திராவில் 75 சதவீதமும், தெலங்கானாவில் 30 சதவீதமும் மதுபான வரி விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு மாதம் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. மின்துறையில் மின்சாரம் வாங்குவதற்காக ரூ.150 கோடி தேவைப்படுகிறது.
கரோனா பாதிப்பு வந்து 59 நாட்கள் ஆகின்றன. இதுவரை ஒருவர் கூட இறக்கவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது ஆகியவற்றை மேற்கொண்டால் போதும். ஆனால் ஆளுநரைக் கட்டுப்படுத்த தெரியவில்லை.
ஆளுநரின் செயல்கள் அனைத்தும் சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணம் என்ற வகையில்தான் இருக்கிறது. ஆளுநர் வாயால் கூறுவதை எல்லாம் நிறைவேற்றி வரும் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். பயந்து சில அதிகாரிகள் கிரண்பேடிக்கு ஆதரவு தருகின்றனர்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT