Published : 22 May 2020 03:04 PM
Last Updated : 22 May 2020 03:04 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே புதுச்சேரியில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சென்னையில் இருந்து வந்த ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. காரைக்காலில் ஒருவரும், மாஹே பிராந்தியத்தில் இரண்டு பேரும், கண்ணூரில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் என தற்போது மொத்தம் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாஹே பிராந்தியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமின்றி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தற்போது ஜிப்மரில் இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா இன்று (மே 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதேசமயம் தளர்வின் காரமணாக மார்க்கெட்டுகளுக்கும், அலுவலகங்களுக்கும் மக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். இது தொடர்ந்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எனவே, மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் புதுச்சேரி மக்களுடன் கூடி இருக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். கரோனா தொற்றுக்கு இது சவாலாக உள்ளது.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதுச்சேரி தற்போது சிவப்பு மண்டலப் பகுதியாக மாறியுள்ளது. எனவே, வெளியில் இருந்து வரும் நபர்களிடம் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து இருங்கள். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனாவுக்கான சிறு அறிகுறிகள் இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்".
இவ்வாறு பிரசாந்த்குமார் பாண்டா தெரிவித்தார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இன்று புதியதாக இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 16 பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும், காரைக்கால் ஒருவரும் என மொத்தமாக 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் கண்ணூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மரில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. மத்திய அரசு சிவப்பு மண்டல பகுதிக்கான வரையறையை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகிறது.
15 நோயாளிகள் உள்ள பகுதி மற்றும் ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் எந்தப் பகுதியில் உள்ளனரோ அந்தப் பகுதியை சிவப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கக் கூறியுள்ளது. இவை இரண்டுக்குள்ளும் புதுச்சேரி வருவதால் புதுச்சேரி சிவப்பு மண்டலப் பகுதியாக மாறியுள்ளது. எனவே புதுச்சேரி மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT