Published : 22 May 2020 02:52 PM
Last Updated : 22 May 2020 02:52 PM

ஓசூரில் இருந்து 1600 பேர் உத்தரப் பிரதேசத்துக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு

ஓசூர்

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த 1600 பேர் ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். அப்படி விண்ணப்பித்தவர்களில் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி வட்டத்தில் 236 பேர், பர்கூர் வட்டம் - 25, தேன்கனிக்கோட்டை மற்றும் தளி - 508, ஓசூர் வட்டம் - 818, சூளகிரி வட்டம்- 13 பேர் என மொத்தம் 1600 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ரயில் மூலமாக உத்தரப் பிரதேசம் அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு ரயில் பயணத்துக்கு ஒரு நபருக்கு பயணச் சீட்டுக் கட்டணம் தலா ரூ.920 வீதம் 1600 பேருக்கு ரூ.14 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் பயணச்சீட்டு கட்டணத் தொகை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலமாகச் செலுத்தப்பட்டது. உத்தரப் பிரதேசம் செல்ல அனுமதி பெற்ற 1600 பேரும் முன்கூட்டியே ஓசூருக்கு அழைத்து வரப்பட்டு அரசுக் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அனைத்து வடநாட்டினரும் ஓசூர் ரயில் நிலையத்துக்கு காலை 9.30 மணி முதல் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட ஆரம்பக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு ரயில்வே மருத்துவமனை மருத்துவர் வாசுதேவன் தலைமையில் இரண்டு செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று அனைவருக்கும் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்து ரயில் நிலையத்துக்குள் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து ரயிலில் செல்வதற்கான பாஸ் வழங்கி, அனைவரையும் சிறப்பு ரயிலில் ஏற்றி அமர வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் பிரபாகர், பயணிகள் அனைவருக்கும் பயணத்தின்போது சாப்பிட சப்பாத்தி, புளி சாதம், 2 லிட்டர் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். அனைத்துப் பயணிகளும் இருக்கையில் அமர்ந்த பிறகு பிற்பகல் 2 மணியளவில் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சிறப்பு ரயில் ஓசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூரு பானஸ்வாடி, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக உத்தரப் பிரதேசம் சென்றடைகிறது என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், டிஎஸ்பி சங்கு, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ஓசூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x